குமரி மாவட்டத்தில் 3–வது நாளாக கடல் சீற்றம்- கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குமரி மாவட்டத்தில் 3–வது நாளாக கடல் சீற்றம்- கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

in News / Local

வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது என்றும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்தநிலையில் 3–வது நாளாக குமரி கடல் பகுதிகளில் தொடர்ந்து சீற்றம் காணப்பட்டது. ஆனால் அலையின் சீற்றம் கடந்த 2 நாட்களை விட நேற்று சற்று குறைவாக இருந்தது. எனினும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையொட்டி நீரோடி, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை, இரையுமன்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 3–வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆவேசத்துடன் வந்து பாறைகளில் மோதி சிதறியது. இதனால், கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தனர். மேலும், கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தினார்கள்.

இதற்கிடையே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான நீரோடி, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, பூத்துறை ஆகிய பகுதிகளை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாநில செயல் தலைவரும் குமரி நாடாளுமன்ற வேட்பாளருமான எச்.வசந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

குமரி மாவட்டம் 72 கிலோ மீட்டர் கடற்கரை கொண்ட மாவட்டமாகும். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு கடற்கரை கிராமம் உள்ளது. ஒகி புயல் மற்றும் கடல் சீற்றத்தால் கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 3 மீனவ கிராமங்களில் குறைந்த நீளம் கொண்ட ரூ.116 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க முதல்–அமைச்சர் அனுமதி அளித்தார். அதன்படி நீரோடி, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை ஆகிய 3 கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top