கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி!

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் பீதி!

in News / Local

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கின்ற, புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி அன்று தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி, கன்னியாகுமரியையும் விட்டு வைக்கவில்லை. இங்கும் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.

இந்த சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்கின்றன. கடல் சீற்றம், கொந்தளிப்பு, நீர்மட்டம் உயர்வு, நீர்மட்டம் தாழ்வு, கடல் உள்வாங்குதல், அலையே இல்லாமல் குளம் போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற மாற்றங்கள் நிகழ்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்து கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் தரைதட்டி நின்றன. அதன்பிறகு கடல் நீர்மட்டம் சீரானதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.

நேற்று காலையில் கடல் திடீரென உள்வாங்கியது. அதாவது, முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் சில அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதன் காரணமாக கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன.

இதனால் கடலில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். மேலும் 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து சேவை வழக்கம் போல் இயக்கப்படவில்லை.

சில மணி நேரம் கழித்து மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதனை தொடர்ந்து காலை 11 மணி முதல் படகு போக்குவரத்து விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டது. ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top