சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை

in News / Local

கன்னியாகுமரியில் நேற்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி கடலில் குளித்தவர்களை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதனால் இங்கு நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதே போல் சுற்றுலா பயணிகளும் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்வார்கள்.

நேற்று அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடலின் சீற்றம் மிக அதிகமாக காணப்பட்டது. 

இதையடுத்து கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் விரைந்து வந்து வெளியேறுமாறு எச்சரித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதை தொடர்ந்து, கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

கிழக்கு கடற்கரை பகுதியில் வங்கக்கடல் அமைதியாக காணப்பட்டது. எனவே, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து நடைபெற்றது. அதே சமயம் இந்திய பெருங்கடல், அரபிக்கடல்களில் சீற்றம் காரணமாக அலைகள் 10 முதல் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகள்  எழுந்து கரையில் உள்ள பாறைகளில் பயங்கர சத்தத்துடன் ஆக்ரோஷமாக மோதி சிதறியது. கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top