விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

in News / Local

ஆரல்வாய்மொழி அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

 இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

முளகுமூடு அருகே கோழிபோர்விளை பெருமாள் விளையை சேர்ந்தவர் பாரதிதாஸ் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவர் நெல்லையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வாரத்துக்கு ஒருமுறை ஊருக்கு வருவது வழக்கம்.

 இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார் பாரதிதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாரதிதாஸ் படுகாயமடைந்தார்.

 மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் (50) என்பவர் மீதும் மோதியது. இதில் அவரும் காயமடைந்தார். 

 உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பாரதிதாஸ் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த நாராயணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரைச் சேர்ந்த செல்வன் (46) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சாலமன் மகன் ராபர்ட் (23). இவர் தனது நண்பரான அழகிய நகரை சேர்ந்த அழகப்பன் மகன் இளையராஜா (24) உடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வெள்ளமடத்துக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் ஆரல்வாய்மொழி அருகே மயிலாடி விலக்கு பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ராபர்ட்டும், இளையராஜாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு ராபர்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இளையராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top