மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

in News / Local

நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). கூலி தொழிலாளியான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

இவர் நேற்று மதியம் பறக்கையில் இருந்து என்.ஜி.ஓ.காலனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை பின்தொடர்ந்தது. சி.டி.எம்.புரம் பகுதியில் வந்த போது புஷ்பாகரன் மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் வழிமறித்தது.

இதைக்கண்டு திடுக்கிட்ட புஷ்பாகரன், மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அந்த கும்பலும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புஷ்பாகரனை விரட்டியது. புஷ்பாகரன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினார். ஆனாலும் கும்பல் அவரை விடவில்லை. ஓட ஓட விரட்டி வெட்டியது. அங்குள்ள சிறிய தெருவுக்குள் புஷ்பாகரன் ஓடினார்.அது முட்டுச்சந்து என்பதால் தெரு முடிவில் எங்கும் செல்ல வழிஇல்லாமல் அப்படியே நின்று விட்டார்.

கொலை கும்பல் புஷ்பாகரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. சுவரில் சாய்ந்தபடியே புஷ்பாகரன் ரத்த வெள்ளத்தில் பலியானார். 5 பேரும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சினிமாவை போல் நடந்த இந்த கொலை சம்பவம் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்தது. கொலை நடந்த தகவல் காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவியது. அங்குள்ள பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன் (சுசீந்திரம்), முத்து (கன்னியாகுமரி), சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன், அஜ்மல் ஜெனிப், சாம்சன் ஜெபதாஸ், பிரசன்னகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொலையான புஷ்பாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

புஷ்பாகரனின் அண்ணன் மகன் விக்கி, இவர், கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி பறக்கை ஏழாங்குடி தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னாவின் தங்கை மீது மோட்டார் சைக்கிள் உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதனை பார்த்த பிரசன்னா, மோட்டார் சைக்கிளில் பார்த்துக் செல்லக்கூடாதா? என்று கூறி விக்கியை கண்டித்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை விக்கி, தன்னுடைய சித்தப்பா புஷ்பாகரனிடம் கூறியுள்ளார். உடனே புஷ்பாகரன் தன்னுடைய இன்னொரு அண்ணன் மகன் சுமன் மற்றும் விக்கியை அழைத்துக் கொண்டு பிரசன்னாவிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த இவர்கள் 3 பேரும் பிரசன்னாவை தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் புஷ்பாகரன், விக்கி, சுமன் ஆகிய 3 பேர் மீதும் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே பிரசன்னாவின் தம்பி கிஷோர், நேற்று முன்தினம் விக்கியிடம் சென்று என்னுடைய அண்ணனை எப்படி தாக்கலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதை அறிந்த புஷ்பாகரன் உள்ளிட்ட சிலர் கிஷோரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர், புஷ்பாகரனை கொலை செய்து விடுவது என்று முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று மதியம் கிஷோர் உள்ளிட்ட 5 பேர் புஷ்பாகரன் எங்கு செல்கிறார் என நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று தீர்த்துக்கட்டியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து புஷ்பாகரன் கொலை தொடர்பாக கிஷோர், அவருடைய அண்ணன் பிரசன்னா, அஜய், சஞ்சய், மாதேஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

கொலை நடந்த பறக்கை பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நகர செயலாளர் கணேஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜானி, கொலையான புஷ்பாகரனின் அண்ணனும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான தாமஸ் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.

அப்போது, கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். புஷ்பாகரன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் புஷ்பாகரன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top