குமரி மாவட்டத்தில் மழை, அணைகளின் நீர்மட்டம் ‘கிடு, கிடு’ உயர்வு !

குமரி மாவட்டத்தில் மழை, அணைகளின் நீர்மட்டம் ‘கிடு, கிடு’ உயர்வு !

in News / Local

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

இதனால் ஆறுகள், கால்வாய்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தேரூர் குளம் நிரம்பி உடையும் அபாய நிலையில் இருப்பதால் குளத்தில் உள்ள தண்ணீர் மறுகால் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இதேபோல் பல குளங்கள் நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை ஜில்லென்ற உள்ளது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 22.6, பெருஞ்சாணி- 21.2, சிற்றார் 1- 34.8, சிற்றார் 2- 26, மாம்பழத்துறையாறு- 31, புத்தன் அணை- 20.4, முக்கடல்- 20, பூதப்பாண்டி- 14.8, களியல்- 28.2, கன்னிமார்- 11.2, கொட்டாரம்- 32, குழித்துறை- 38, மயிலாடி- 23, நாகர்கோவில்- 20, சுருளக்கோடு- 29.4, தக்கலை- 13.4, இரணியல்- 18.6, பாலமோர்- 26.4, கோழிப்போர்விளை- 30, அடையாமடை- 23, முள்ளங்கினாவிளை- 30, ஆனைக்கிடங்கு- 31.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக குழித்துறையில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றும் அதிக அளவில் அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1842 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 2113 கன அடி நீரும், சிற்றார்-1 அணைக்கு 61 கன அடி நீரும், சிற்றார்-2 அணைக்கு 96 கன அடி நீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 25 கன அடி நீரும் வந்தது.

இதில் மாம்பழத்துறையாறு அணையில் இருந்து மட்டும் 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மற்ற அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் ‘கிடு, கிடு‘வென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 9.20 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 2½ அடி உயர்ந்து 11.60 அடியானது. 40.70 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 4½ அடி உயர்ந்து 45.30 அடியானது. இதேபோல் சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 8.65 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 8.76 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 6.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.27 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் -19.30 அடியானது.

மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் இதுவரை 6 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் ஒரு வீடும், விளவங்கோடு தாலுகா பகுதியில் ஒரு வீடும், கிள்ளியூர் தாலுகா பகுதியில் 4 வீடுகளும் என மொத்தம் 6 வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்துள்ளன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top