குமரியில் பரவலாக மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; தண்ணீரில் மூழ்கியது சப்பாத்து பாலம்!

குமரியில் பரவலாக மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; தண்ணீரில் மூழ்கியது சப்பாத்து பாலம்!

in News / Local

குமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த மழை சாரல் மழையாக அவ்வப்போது தான் பெய்து வந்தது. மேலும் கோடைகாலத்தை போன்று வெயிலும் சுட்டெரித்தது. பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்போடு கன்னிப்பூ நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்களை காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையிலும், மாலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. பலர் குடைகளை பிடித்துச் சென்றனர். இதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்றவர்களும் குடைகளை பிடித்தபடியே சென்றனர்.

அதே சமயத்தில் குமரி மேற்கு மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றியாறு அருகே உள்ள சப்பாத்துபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதே நிலை நீடித்ததால் நேற்று குற்றியாறு, மோதிரமலை, மைலாறு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

மாணவர்கள், ரப்பர் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளானார்கள். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் அங்குள்ள கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 6.2, சிற்றார் 1- 5, சிற்றார் 2- 5, பொய்கை-5, மாம்பழத்துறையாறு- 12, பூதப்பாண்டி- 1.6, கன்னிமார்- 4.2, கொட்டாரம்- 8.4, மயிலாடி- 4.2, நாகர்கோவில்- 1.1, சுருளக்கோடு- 16.2, பாலமோர்- 15.2, ஆரல்வாய்மொழி- 5, முள்ளங்கினாவிளை- 3 என்ற அளவில் பதிவாகி இருந்தது.

நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் நாகர்கோவிலில் 3 மி.மீ. மழையும், கன்னிமார் பகுதியில் 18 மி.மீ. மழையும் பதிவானது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 495 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 539 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 7 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 10 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் பெய்த மழையினாலும், அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாலும் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் நேற்று மூடப்பட்டன. சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை போன்ற அணைகளும் மூடப்பட்டுள்ளன. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து மட்டும் 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top