நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவித்த பிறகும் மாற்றப்படாத வரவேற்பு பலகை அதிகாரிகள் கவனிப்பார்களா?

நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவித்த பிறகும் மாற்றப்படாத வரவேற்பு பலகை அதிகாரிகள் கவனிப்பார்களா?

in News / Local

நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவித்த பின்னரும் வரவேற்பு பலகை மாற்றப்படாமல் நகராட்சி என்றே உள்ளது. இதனை மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கன்னியாகுமரி ஆகும். சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் உள்ளது. நாகர்கோவில் நகராட்சி 52 வார்டுகளை கொண்டது ஆகும். இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசும்போது நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.


மாநகராட்சியானது:

அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13-ந்தேதி தமிழக சட்டசபையில் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மசோதா கொண்டு வரப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டு, நாகர்கோவில் மாநகராட்சியானது.

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது, நகருக்குள் வருபவர்களை வரவேற்கும் விதமாக ஒழுகினசேரி பகுதியில் “நாகர்கோவில் நகராட்சி தங்களை இனிதே வரவேற்கிறது“ என்று பலகை அமைக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஏறத்தாழ 6 மாதங்கள் ஆக போகிறது. ஆனாலும் இன்று வரை வரவேற்பு பெயர் பலகையில் உள்ள நகராட்சி அகற்றப்பட்டு மாநகராட்சி என மாற்றாமல் உள்ளனர். இதனை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் அவதி:

இதுமட்டுமல்லாமல், நாகர்கோவில் நகரில் பாதாளச்சாக்கடை பணி முறையாக நடைபெறாததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிலும் முக்கிய சாலைகளில் பாதாளச்சாக்கடை பணியை மேற்கொள்ளும் போது, அதிக எண்ணிக்கையிலான ஆட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் அவ்வை சண்முகம் சாலை வழியாகத்தான் வடசேரி செல்லும். அந்த சாலையில் ஏற்கனவே பாதாளச்சாக்கடை பணிக்காக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. தற்போது மீண்டும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் அரசு பஸ்களில் செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த சாலையில் திட்டமிட்டு ஒரே நேரத்தில் முழுமையாக பணியை முடிக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top