நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள் மற்றும் ஓட்டல்களுக்கு சீல் வைப்பு!

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள் மற்றும் ஓட்டல்களுக்கு சீல் வைப்பு!

in News / Local

நாகர்கோவில் நகரில் ஓட்டல்கள், கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவை பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படும் கட்டிடங்களின் உரிமையாளர்கள், உரிய அனுமதி பெற்று தொடர்ந்து கட்டிடங்களில் தங்களது தொழில்களை நடத்தலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை அனுப்பி இருந்தது. ஆனால் பல உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களுக்கு அனுமதி பெறாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். அதாவது அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிகளாக ஆய்வு செய்து உரிமம் பெறாத கட்டிடங்களுக்கான மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அந்த கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைத்தனர். அந்த வகையில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு ஓட்டல், ஒரு விடுதி மற்றும் 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தார்கள்.

அதன்பிறகு மாலையில் வடசேரி டிஸ்லரி ரோட்டில் 15 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில், நகர அமைப்பு அதிகாரி விமலா தலைமையில் ஆய்வாளர்கள் கெவின்ஜாய், சந்தோஷ்குமார், மகேஷ்வரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாகர்கோவில் நகரில் ஏற்கனவே மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டன. அதன்பிறகும் ஆய்வு நடத்தி அனுமதி பெறாமல் இயங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பினோம். ஆனாலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெறாததால் ‘சீல்‘ வைத்துள்ளோம். அண்ணா பஸ் நிலையம் அருகே ‘சீல்‘ வைக்கப்பட்ட ஓட்டலில் கார் பார்கிங் இல்லை. இதனால் ஓட்டலுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துகிறார்கள். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பெரிய ஓட்டல்களில் கார் பார்க்கிங் வசதி செய்வது அவசியம். இதே போல் இன்னும் நிறைய கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் விரைவில் உரிமம் பெற வேண்டும்“ என்றார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top