திற்பரப்பு அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப சாவு!

திற்பரப்பு அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப சாவு!

in News / Local

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே மாஞ்சகோணம் பகுதியை சேர்ந்தவர் மோகனன். இவருடைய மனைவி ஷோபா. இவர்களுடைய மகன் அருணா ஜோயி, வயது 12, உண்ணியூர்கோணம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது இறுதி தேர்வு எழுதி தேர்வு முடுவுகளுக்காக காத்திருந்தான். இந்தநிலையில் கோடைவிடுமுறையையொட்டி நேற்று மதியம் அருணா ஜோயி வீட்டின் அருகே உள்ள பகுதியில் தனது நண்பர்களுடன் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய துவங்கியது. உடனே விளையாடி கொண்டிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி அவரவர் வீட்டை நோக்கி ஓடினர். அந்த சமயத்தில் வீடு நோக்கி ஓடி கொண்டிருந்த அருணா ஜோயி மீது திடீரென மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் அதே இடத்திலேயே அருணா ஜோயி சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தான். இதனை அவனது நண்பர்கள் யாருமே கவனிக்காமல் சென்று விட்டனர். இதற்கிடையே அருணா ஜோயி பெற்றோர் அங்கு வந்து. அசைவற்ற நிலையில் கிடந்த அருணா ஜோயியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர், அருணா ஜோயி ஏற்கனவே இறந்து விட்டதாகவும், மின்னல் தாக்கியதில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அருணா ஜோயி உடலை வாங்கிய அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். இந்த சம்பவம் குலசேகரம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அருணா ஜோயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீசாருக்கு தெரியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று அருணா ஜோயி பெற்றோருக்கு அறிவுரை கூறினர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top