வாகனம் மோதியதில் வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்தார்

வாகனம் மோதியதில் வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்தார்

in News / Local

ஆரல்வாய்மொழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் கிருஷ்ண தினேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண தினேஷ், தனது மோட்டார் சைக்கிளில் காவல் கிணறு நோக்கி சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கிருஷ்ண தினேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண தினேஷ், அதே வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலை அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top