வாலிபரரை அடித்துக் கொலை செய்து உடலை குளத்தில் வீசிய நண்பர்களை தேடுகிறது போலீஸ்!

வாலிபரரை அடித்துக் கொலை செய்து உடலை குளத்தில் வீசிய நண்பர்களை தேடுகிறது போலீஸ்!

in News / Local

நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை அருகே ஆளூர் ரெயில் நிலையம் பகுதியில் வீராகுளம் உள்ளது. இந்த குளத்துக்கு நேற்று காலையில் குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குளத்தில் ஆண் ஒருவரது சடலம் மிதந்தது. இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இரணியல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பொன் தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராம கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டனர். உடற்கூறு ஆய்வாளர் ஜீவானந்தம் சம்பவ இடத்தில் இறந்தவரது உடலில் எங்கெல்லாம் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து போலீசார், பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவரது சட்டை கிழிந்து இருந்தது. அவரது தலை, முதுகு மற்றும் உடல் முழுவதும் கம்பால் தாக்கப்பட்டதற்கான காயம் இருந்தது. எனவே அந்த நபரை யாரோ மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு உடலை குளத்துக்குள் வீசி இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் ஆளூர் அருகே தோப்புவிளை சரல்விளையை சேர்ந்த சுரேந்திரன் மகன் நவீன் (வயது 22) என்பது தெரிய வந்தது. சுரேந்திரன் ஆளூர் நகர முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ஆவார். தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நவீன் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் மற்றும் போதை பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இவர், மது போதையில் தாய் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. எனவே நவீனின் தொல்லை தாங்க முடியாமல் அவருடைய தாய், தங்கை தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். நவீன் மட்டும் அவருடைய தந்தைவழி பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் நவீன் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்த பிறகு, மாலையில் நவீன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீராகுளம் கரையில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவருடைய நண்பர்களுக்கும், நவீனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் நவீனை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கம்புகள் கிடந்தன. எனவே நவீனுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

நவீனின் நண்பர்கள் சிக்கிய பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இரணியல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top