தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த முன்னணி நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டதாக பல்சர் சுனில் உள்ளிட்டோரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். நடிகர் திலீப் கூலிப்படையை ஏவி இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார்.
கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்ட திலீப் 85 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையோடு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அந்த வீடியோவை தன்னிடம் வழங்குமாறு திலீப் மனுதாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு வீடியோவை நீதிமன்றத்துக்கு நேரில் வந்து பார்த்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதுபோல் இந்த வழக்கில் கைதான மேலும் 5 பேருக்கும் வீடியோவை பார்க்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து கொச்சி நீதிமன்றத்துக்கு வக்கீல்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் வந்த திலீப் தனி அறையில் வீடியோவை பார்த்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுபோல் பல்சர் சுனில் உள்ளிட்டோரும் கோர்ட்டுக்கு வந்து வீடியோவை பார்த்தனர். கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
0 Comments