இரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் பாகம்தான் The Nun. இயக்குனர் James Van தன்னுடைய கதையான Conjuring சீரிஸின் முதல் இரண்டு பாகங்களை தானே இயக்கி விட்டு, மூன்றாம் பாகமான The Nun படத்தின் ஸ்கிரிப்டை மட்டும் எழுதி இயக்குனர் Corin Hardyயிடம் கொடுத்து விட்டு, தயாரிப்பதோடு தனது வேலையை நிறுத்தி விட்டிருக்கிறார்.சொல்லப்போனால் இந்தப்படம் Conjuring சீரிஸின் ஐந்தாவது படம் என்று கூடச் சொல்லலாம்.
2013 ல் வெளிவந்த The Conjuring முதல் பாகத்தில் ஒரு சர்க்கஸ் கோமாளி பொம்மை ஒன்று வரும். அதற்குள்ளே பேய் வாசம் செய்து கொண்டிருக்கும். அந்த Demonologist தன்னுடைய வீட்டின் அறை ஒன்றில், தான் பேய் விரட்டப் போன வீடுகளிலுள்ள சந்தேகத்துக்குரிய பொருட்களை சேகரித்து வைத்திருப்பார். அங்கு ஒரு பெண்பிள்ளை பொம்மை ஒன்று இருக்கும். அதன் பெயர் Annabelle. ஏன் அந்த பொம்மையை சும்மா விடவேண்டும் என அந்த Annabelle பொம்மை ஒரு குடும்பத்தைப் போட்டு பொளப்பதை இயக்குனர் John R. Leonetti 2014 ல் அதன் முதல் பாகமான Annabelle எடுத்தார். அதில் Annabelleக்குள் இருக்கும் சைத்தானை விரட்டுவார்கள்.
2016 ல் The Conjuring 2 வெளிவந்து சக்கை போடு போட்டது. அந்த Demonologist தம்பதிகளுக்கே பேய் செய்வினை வைத்து ஆட்டும். அதில் ஒரு கன்னியாஸ்த்ரி பேய் வந்து அடித்து துவைத்து மிரட்டும். அதையும் விரட்டுவார்கள்.
Annabelle யார் ? என்ற கேள்வி எழுமுன்னே 2017 ல் Annabelle ன் Prequel சீரிசாக இயக்குனர் David F. Sandberg இயக்கத்தில் Annabelle: Creation என்ற பெயரில் வெளிவந்தது. அந்த பொம்மை எப்படி உருவானது என்பதை மயிர்க்கூச்செறியும் வகையில் திரையில் எடுத்து ஹிட்டடித்தார்கள். Prequel என்றால் முன்கதை என்று அர்த்தம். ஒருபடத்திலுள்ள கதாபாத்திரத்தின் முன்கதையை அதே படத்தில் Flashback காட்சியில் சொல்லாமல் அதை இரண்டாம் பாகமாக எடுப்பதுதான் Prequel. அதே கதாபாத்திரத்தின் அடுத்தடுத்த சாகசங்களைத் தொடர்ந்து படமாக எடுத்தால் அதற்கு Sequel என்று பெயர். ( சும்மா சொல்லி வைப்போம் )
சரி! Annabelle எங்கிருந்து வந்தாள் என்பதைச் சொல்லியாகிவிட்டது, The Conjuring 2- ல் வந்து மிரட்டிய அந்தக் கன்னியாஸ்த்ரி யார் ? என்பதைச் சொல்லியாக வேண்டுமே என்ற தவிப்பில் இதோ அதிரடியாக 2018 ல் வெளிவந்திருக்கும் படம்தான் The Nun. போஸ்டரே வயிற்றைக் கலக்குமாறு டிசைன் செய்திருக்கிறார்கள். பார்த்தவுடன் பகீரென்று இருக்கிறது. பொதுவாக திகில் படங்களுக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. ஒரு வீட்டில் , தெருவில் , பாழடைந்த பங்களாவில் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே பேய் வசித்துக் கொண்டு அந்தப் பகுதியில் எழுந்தருள்பவர்களின் உச்சி முடியைப் பிடித்து ஆட்டும். இங்கும் அதே கதைதான்.
ருமேனியாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கும் பழமை வாய்ந்த ஒரு தேவாலயம், அங்கிருக்கும் கன்னியாஸ்த்ரிகள் மடத்திலுள்ள இரண்டு கன்னியாஸ்திரிகள் ஒரு குறிப்பிட்ட அறையின் கதவைத் திறக்கிறார்கள். உள்ளே நுழைந்த ஒரு கன்னியாஸ்திரியை அங்கிருக்கும் பேய் இழுத்துக் கொண்டு போகிறது. இறுதியாக அந்த கன்னியாஸ்த்ரி மற்றொரு இளம் கன்னியாஸ்த்ரியான விக்டோரியாவிடம், அந்தப் பேய்க்கு ஜீவித்திருக்க ஒரு உடல் தேவை ! அது உன்னையே தேர்ந்தெடுக்கும் ! உன் உடலை அதற்குக் கொடுத்து விடாதே ! என்றவாறே உள்ளே இழுத்துச் செல்லப் படுகிறாள். உடனே அந்த அறையின் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பியோடும் கன்னியாஸ்த்ரி விக்டோரியா, அந்த பேயிடமிருந்து தப்பித்துக் கொள்ள தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
பக்கத்துக் கிராமத்தில் இருந்து அந்த கன்னியாஸ்த்ரி மடத்துக்கு வழக்கமாகக் காய்கறிகளைக் கொண்டு வரும் இளைஞன் ஃபிரெஞ்சி. ஒருநாள் அங்கு வரும்போது அந்த கன்னியாஸ்த்ரி விக்டோரியாவின் சடலம் அழுகித் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். பின்பு அவளது பிணத்தை எடுத்து குளிர்பதன அறைக்குள் படுக்க வைத்துவிட்டு வாட்டிகனுக்குத் தகவல் அனுப்புகிறான். வாட்டிகன் தலைமை ருமேனியாவிலுள்ள தேவாலயத்தை ஆய்வு செய்ய ஃபாதர் பர்க்கையும், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெறும் இளம்பெண் ஐரினையும் ருமேனியாவுக்கு அனுப்பி வைக்கிறது. அவர்கள் ருமேனியாவுக்கு சென்று இளைஞன் ஃபிரெஞ்சியை அழைத்துக் கொண்டு, அந்த தேவாலயத்துக்கு செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றவுடன் அவர்கள் செல்லும் வண்டியில் பூட்டப்பட்டிருக்கும் குதிரை மிரண்டு நகர மறுக்கிறது.
ஃபிரெஞ்சி அந்த பிரதேசத்தின் அமானுஷ்ய தன்மையைக் குறித்தும், பயங்கரமான துஷ்ட சக்தி இருப்பதால் அந்தப் பகுதிக்கு கிராமத்து ஆட்கள் யாருமே வருவதில்லை! என்றும் சொல்லி அழைத்துச் செல்கிறான். அங்கிருக்கும் துஷ்ட சக்தி வெளியில் வந்துவிடக் கூடாதென தேவாலயத்தைச் சுற்றிலும் சிலுவைகள் அறையப் பட்டிருக்கின்றன. அதைத் தாண்டி கோட்டை போன்ற பழங்கால தேவாலயத்தின் பதன அறைக்குள் சென்று சடலத்தைப் பார்த்தால், அந்த சடலம் எழுந்து உட்கார்ந்திருப்பது கண்டு ஃபிரெஞ்சி குழப்பமடைகிறான். அதன் கையில் இருக்கும் சாவியை எடுத்துக் கொண்டு அதை வெளியிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைக்கிறார்கள்.
மீண்டும் தேவாலய வாசலுக்கு வரும்போது அங்கு விக்டோரியா தொங்கிக் கொண்டிருந்த இடத்தின் கீழ் ரத்தம் வழிந்து கிடகிறது. அதைக் கையில் தொட்டுப் பார்த்தால் அது உறையாமல் அப்படியே இருக்கிறது கண்டு வியந்தபடியே உள்ளே நுழைகிறார்கள். அங்கே இருட்டில் மதர் சுப்பீரியர் உட்கார்ந்து கொண்டு அவர்களிடம் விசாரிக்கிறார். வந்த காரணத்தைச் சொன்னதும் மதர் சுப்பீரியர் அவர்களை ஆலயத்தைவிட்டு வெளியே போகச் சொல்லவும், ஃபாதர் பர்க் மறுக்கிறார். மேலும் அங்குள்ள கன்னியாஸ்திகளிடம் அவர்களின் நலன் குறித்து விசாரணை செய்த பின்பே அங்கிருந்து திருப்பிச் செல்வதாகக் கூற மதர் சுப்பீரியர் அன்று பிரார்த்தனை நடப்பதாவும் , மறுநாள் வரை காத்திருந்து வேலையை முடிக்குமாறும் சொல்கிறார். ஃபிரெஞ்சி அங்கிருந்து கிளம்புகிறான். அப்போது ஃபிரெஞ்சியை ஒரு பேய் காட்டுக்குள் துரத்துகிறது. அதனிடமிருந்து தப்பித்து ஓடுகிறான் ஃபிரெஞ்சி.
இருவரும் அங்கு தங்குகிறார்கள். அன்று இரவு பாதர் பர்க்கும் , ஐரினும் இரவு உணவின் போது பேசிக் கொண்டிருக்கையில் ஐரின் தனக்கு சிறு வயதிலிருந்தே வினோதமான காட்சிகள் வருவதாகச் சொல்கிறாள். அதற்கு பாதர். பர்க் தானும் இது போன்ற வினோத காட்சிகளைக் கண்ட ஒரு சிறுவனைப் பேயோட்டினேன். ஆனால் அவன் இறந்து விட்டான் என்று கூறுகிறார். ஆளுக்கொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது யாரோ ஒருவர் ஃபாதர் பர்க்கை எழுப்பி அலைக்கழிக்கிறார். இரண்டு பேரும் ராத்திரி முழுவதும் அந்தப் பேயிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகிறார்கள். மறுநாள் காலையில் ஆலயத்துக்குள் நுழைந்து ஐரின் மட்டும் கன்னியாஸ்திரி மடத்துக்குள் அனுமதிக்கப்படுகிறாள். ஐரினை உள்ளே அனுப்பிவிட்டு ஃபாதர்.பர்க் தேவாலயத்தில் காத்திருக்கிறார்.
உள்ளே சென்ற ஐரின் அங்கிருக்கும் கன்னியாஸ்திரி ஓனாவிடம் அந்த ஆலயத்தின் வரலாறு குறித்துக் கேட்கும் போது, ஓனா சொல்கிறாள். அதாவது , ரொம்பப் பழமை வாய்ந்த அந்த ஆலயத்தை ஒரு மன்னர் கட்டியதாகவும், அந்த மன்னர் அந்த ஆலயத்தின் அடியிலுள்ள ஒரு இருளின் வாசலைத் திறந்து 'வாலக்' என்னும் சாத்தானை வெளிக்கொண்டு வந்து பூமியை தனக்குரியதாக மாற்ற நரபலிகள் கொடுத்ததாகவும், அதைத் தடுத்த ஆலய நிர்வாகம் அந்தத் திறக்கப் பட்ட வாசலை இயேசுகிறிஸ்துவின் ரத்தத்தால் மீண்டும் மூடி, அந்த மந்திரவாதியைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறாள். அதன் பின் நடந்த யுத்தத்தில் குண்டுகள் ஆலயத்தின் மீது வீசப் பட்டு அந்த வாசல் திறந்து கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த அந்த துஷ்ட சக்தி தனக்கான உடல் கிடைக்காததால் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறாள்.
ஆலயத்தில் அமர்ந்திருக்கும் பர்க் அங்குள்ள ஆலய வரைபடத்தைப் பார்த்து அங்கு சென்று பார்க்கப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து மதர் சுப்பீரியரின் குரல் கேட்கிறது. உன்னால் அங்கு நுழைய முடியாது ... உன்னால் முடிந்தால் உள்ளே போன ஐரினைக் காப்பாற்று! என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக் கொள்கிறாள். அப்போது மதர் சுப்பீரியரைத் தொடும் பர்க் அதிர்ச்சியடைகிறார். அங்கிக்கு உள்ளே வெறும் ஒரு கையின் எலும்புக்கூட்டில் ஒரு சிலுவை மட்டும் இருக்கிறது. அப்போது மடத்தின் வாயில் தாமாக மூடிக் கொள்கிறது. ஐரின் உள்ளே இருக்கிறாள்.
அங்கே கிராமத்தில் மதுபானக் கடையில் அமர்ந்திருக்கும் ஃபிரெஞ்சியிடம் , விற்பனையாளர் ஒருவர், ஃபாதர்.பர்க்கும் , ஐரினும் சடலமாகத்தான் கிடைப்பார்கள் என்று சொல்லவும் , ஃபிரெஞ்சி கிளம்பி ஆலயத்துக்கு வருகிறான். செத்துப் போன விக்டோரியாவின் கையிலிருந்த சாவியைக் கொண்டு அந்த அறையைத் திறந்தால்தான் இயேசு கிறிஸ்துவின் ரத்தம் அடங்கிய குப்பியை எடுக்க முடியும். அதை எடுத்தால்தான் அந்த பிசாசைக் கட்டுப்படுத்தி , அந்த இருளின் வாசலை அடைக்க முடியும் என்னும் நிலையில் ஐரின் அந்தக் கொடூரமான பேயிடம் சிக்கிக் கொள்கிறாள். ஐரின் என்ன ஆனாள் ? பர்க் அவளைக் காப்பாற்றினாரா ? ஃபிரெஞ்சி என்ன ஆனான் ? மூவரும் சேர்ந்து அந்த பிசாசை ஒழித்தார்களா ? என்பதுதான் ஒன்றரை மணிநேரத்து பரபரபான ஜெட் வேகத் திரைக்கதை.
பயம் காட்ட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் மட்டுமே எழுதப் பட்ட திரைக்கதையைப் படமாக்கி வென்றிருக்கிறார்கள். முதல் காட்சியில் துவங்கும் திகில் படம் முடிந்தும் கூட அகலவில்லை. பார்வையாளருக்கு நிமிர்ந்து உட்காரக் கூட நேரம் கொடுக்கவில்லை.
ஃபாதர்.பர்க்காக டேமியன் ஃபிச்சிரும், சிஸ்டர் ஐரினாக டேய்சா ஃபார்மிகாவும் , ஃபிரெஞ்சியாக ஜோனாஸ் பிளாக்கேட்டும் , தி நன் கேரக்டரில் போனி ஆரோன்சும் நடித்திருக்கிறார்கள். போனி ஆரோன்ஸ் மேக் அப் இல்லாமலேயே பயங்கரமாக இருக்கிறார். படத்தில் மொத்தமே ஒரு இருபது சொச்சம் பேர்தான் நடித்திருக்கிறார்கள். ஐரினாக வரும் டேய்சா ஃபார்மிகா சிறப்பு., நிறைவாக செய்திருக்கிறார்.
படம் முழுவதும் இருட்டிலேயே நடப்பதால் வெளிச்சம் வரும் காட்சியிலெல்லாம் ஒருவித ஆசுவாசம் தொற்றிக் கொள்கிறது. ஆனாலும் அடுத்த நொடியே பேய் வந்து மிரட்டும் போது பயத்தில் தியேட்டரே கத்துகிறது. மரத்திலிருந்து பேய் ஃபிரெஞ்சி மீது குதிப்பது, தூரத்தில் இருந்து ' வாலக் ' கன்னியாஸ்த்ரி உடையில் இருட்டுக்குள் துரத்தி வரும் காட்சி , ஃபாதர். பர்க்கின் தோளில் கைவைத்து ' ஃபாதர் ' என்று சன்னமாக பேய் அழைப்பது, ஃபாதரைத் தேடி வரும் ஐரினை Nun பேய் வந்து ஆக்கிரமிக்க முயன்று, அந்த அதிர்வில் பத்தடி உயர சிலுவையில் தொங்கும் தலையில்லாத இயேசு கிறிஸ்து சிலை கீழே விழுவது, மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் ஃபாதர்.பெர்க்கை ஐரின் காப்பாற்றுவது என்று காட்சிக்கு காட்சி சிக்சர் அடிக்கிறார்கள்.
பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஏபல் கொர்நியோவ்ஸ்கி மிரட்டி எடுத்திருக்கிறார். அத்தனை அதிர்வு. அதிலும் பிளஸ் என்னவென்றால் பின்னணி இசையில்லாமலேயே பயமுறுத்தும் ஒளிப்பதிவுதான் படத்தின் பலம். இறுதிக்காட்சியில் அந்த பிரதேசமே ஒரு ஆளில்லாத அத்துவானம் என்பது நமக்குப் புரியும் போது பயத்தில் உள்ளங்கால்கள் வியர்த்துப் போகிறது.
பேயிடமிருந்து தப்பித்து, கால்தவறி கல்லறைக்குழிக்குள் இருக்கும் சவப்பெட்டியில் ஃபாதர் பர்க் விழுந்ததும் அவருக்கு ஒரு குளோசப் வைத்து அதை அப்படியே wide ல் கொண்டு போய் கல்லறை கல்வெட்டில் கொண்டு நிறுத்தி குளோசப்பில் வைத்து விட்டு ' 'இதோ இங்கே பாதர் பர்க் புதைக்கப்பட்டிருக்கிறார்' என்று Voice over ல் கூறிவிட்டு மீண்டும் கேமராவை டாப் ஆங்கிளில் கொண்டு வரும்போது கல்லறை மூடியிருப்பதாகக் காண்பிக்கும் காட்சியில் திரைக்கதை ஒருமகா குசும்பனால் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கமல்ஹாசனின் படத்தில் எல்லா ஃபிரேமிலும் கமலே நிற்பது போல ஆங்காங்கே திரைமறைவில் , ஜன்னலில் , நிழலாக அல்லது நேரில் அடிக்கடி Nun வந்து நின்று கொண்டிருப்பது உறுத்தினாலும் கூட அதுவே டெம்போவையும், ரத்த அழுத்தத்தையும் ஏற்றிவிடும் எலிமென்டாக இருப்பதென்னவோ உண்மை. லைட் யூனிட் செலவு மிச்சம், மெழுகுவர்த்தி , லைட்டர் , ஹரிக்கேன் விளக்கு என்று சிம்பிளாக ஒளி அமைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த செலவை D.I டிப்பார்ட்மெண்டு சமன் செய்திருக்கும். அத்தனை நேர்த்தியான கலர் டோன். கிளைமாக்ஸ் செம்ம திரில்லிங்... அதிலும் எண்டு கார்டு போட்டதே தெரியாமல் படத்தை முடித்திருப்பது புத்திசாலித்தனம்.
தியேட்டர் ஆப்பரேட்டர்கள் அடிக்கடி எடிட்டர்கள் ஆகிவிடுவது நம்மூரின் சாபக்கேடு. ஆறுமணிநேர ரா ஃபூட்டேஜிலிருந்து டைரக்டர் உட்பட ஒரு பெரிய குழுவே உட்கார்ந்து , காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, ஒன்றை மணிநேரமாக சுருக்கி ஒரு படத்தை எடுத்தால் , துண்டு பீடியை வாயில் கவ்விக் கொண்டு ஸ்பீல்பெர்க்கையும் , கிறிஸ்டோபர்நோலனையும் ஒரு அரை அடி சுருக்கும் ஆப்பரேட்டர் மண்டையன்களை என்ன செய்வது ? பத்து நிமிஷத்துல என்னடா கரண்டு செலவு வந்துரப் போவுது ? நேற்று பார்த்த நிறைய காட்சிகளில் இன்று ஆப்பரேட்டர் கை வைத்திருந்தார்.
இனியெல்லாம் வழியில் கன்னியாஸ்திரிகள் வந்தால் கையெடுத்துக் கும்பிடலாமா ? அல்லது பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடலாமா என்றே தோன்றும். பயப்படாமல் பார்த்தால் பார்க்கலாம். இல்லையென்றால் 'வாலக்' உங்கள் கனவில் வருவாள்.
0 Comments