ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இன்னும் ஒரு மகுடம்!

ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இன்னும் ஒரு மகுடம்!

in Entertainment / Movies

சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், ஒத்த செருப்பு, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்திய திரைப்பட அமைப்பின் மூலமாக, கடந்த 10-ம் தேதி தொடங்கியது. சென்னையிலுள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில், உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150 படங்கள் திரையிடப்பட்டன.

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்று கவனத்தை ஈர்த்த படங்களுக்கான வரிசையில் கத்தார், நியூசிலாந்து, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 படங்கள் முதன்முறையாகத் திரையிடப்பட்டன. மேலும், அர்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 95 படங்கள் திரையிடப்பட்டன.

7 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில், அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஜீவி, கனா, மெய், ஒத்த செருப்பு, பிழை, சீதக்காதி, சில்லுக் கருப்பட்டி மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், இறுதி விழாவின் பொது , தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படம், சிறந்த படத்துக்கான முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை சில்லுக் கருப்பட்டி மற்றும் பக்ரீத் ஆகிய இரண்டு படங்களும் பகிர்ந்து கொண்டன.

சிறப்பு நடுவர் விருது, அசுரன் படத்துக்கு வழங்கப்பட்டது. அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது, ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு நடுவர் சான்றிதழ் விருது, ஜீவி படத்தின் கதையை எழுதிய பாபு தமிழ் மற்றும் வி.ஜே. கோபிநாத் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top