மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, 6 வயது பாகிஸ்தான் சிறுமிக்கு விசா அளிக்கக்குமாறு பாஜக எம்.பி. கௌதம் கம்பீரின் விடுத்திருந்த கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளாதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இதய நோயால் அவதிக்குள்ளாகியிருந்த 6 வயது பாகிஸ்தான் சிறுமி ஒமாயிமா அலி, உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஓர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். பின்பு பாகிஸ்தான் திரும்பிய அச்சிறுமி, இதய அறுவ சிகிச்சைக்காக மீண்டும் இந்தியா வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தார், இதையறிந்த, பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. கௌதம் கம்பீர், அந்த சிறுமிக்கு விசா அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இது குறித்து கூறிய கௌதம் கம்பீர், "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹமது யூசப் இடமிருந்து எனக்கு வந்த அழைப்பில், ஒமாயிமாவின் நிலையை விளக்கி அவருக்கு விசா அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதை தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நான் ஓர் கோரிக்கை மனு அனுப்பியிருந்தேன். அதன் அடிப்படையில், அச்சிறுமி மற்றும் அவரது குடும்பத்தார்க்கு விசா அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் அரசின் மீது தனக்கு கோபம் உள்ளதாகவும், எனினும் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments