தேர்தல் பிரச்சாரத்தில் புதிய தமிழகம் கொடியை பயன்படுத்தியதால் பதற்றம்!

தேர்தல் பிரச்சாரத்தில் புதிய தமிழகம் கொடியை பயன்படுத்தியதால் பதற்றம்!

in News / Politics

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே கிருஷ்ணசாமியின் படத்துடன் அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக 11 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-கள், எம்.பி-க்கள் களமிறங்கி பிரசாரம் செய்துவருகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறவில்லை. ஆதி திராவிடர் பட்டியல் இனத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அந்தச் சமூகத்தினரிடம் ஆளுங்கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது.

புதிய தமிழகம் கட்சியின் கொடியையோ அல்லது அக்கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியின் படத்தையோ பயன்படுத்தக் கூடாது என அக்கட்சியினர் ஏற்கெனவே வலியுறுத்தினார்கள். இது தொடர்பாகக் காவல்நிலையத்திலும் புகார் அளித்ததால், வேட்பாளரின் பிரசார வாகனம் உள்ளிட்டவற்றில் இருந்த கட்சிக் கொடி மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி பகுதியில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அவருடன் வந்தவர்கள் விநியோகித்த நோட்டீஸில் டாக்டர் கிருஷ்ணசாமி படம் போடப்பட்டிருந்தது. அதற்கு புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளரான தளவாய் பாண்டியன் தலைமையில் புதிய தமிழகம் தொண்டர்கள் அமைச்சரை முற்றுகை செய்ததுடன் பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தனர்.

அமைச்சருடன் வந்திருந்த அ.தி.மு.க-வினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் புதிய தமிழகம் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்கள் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி படத்தைக் கட்சியின் அனுமதி இல்லாமல் போட்டு வாக்கு சேகரிப்பது தவறானது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் பகுதியில் இரு கட்சியினரும் குவிந்திருந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதனால் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் அந்த இடத்தில் பிரசாரம் செய்யாமல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டார். அதன் பின்னரே புதிய தமிழகம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top