பா.ஜனதா துணைத்தலைவர் அரசகுமார் தி.மு.க.வில் சேர்ந்தார்!

பா.ஜனதா துணைத்தலைவர் அரசகுமார் தி.மு.க.வில் சேர்ந்தார்!

in News / Politics

தமிழக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார். சமீபத்தில் புதுக்கோட்டையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவன் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். நாமெல்லாம் அதை பார்த்து அகமகிழ்ச்சி அடைவோம்” என்று கூறினார்.

இது பா.ஜனதா கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் எந்த கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அரசகுமார் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து அரசகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் நடமாடிய அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எனும் தாய் கழகத்தில் மீண்டும் என்னை இணைத்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திருமண விழாவில் உண்மையை, எதார்த்தத்தை வெளிப்படுத்தியதற்காக என் வாழ்நாளில் இதுவரை காது கொடுத்து கேட்கமுடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் கேட்க வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்டதை எண்ணி, மனம் சோர்ந்திருந்தேன்.

நான் பதவிக்கு ஆசைப்பட்டு தி.மு.க.வுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top