குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாகர்கோவில், தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாகர்கோவில், தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!

in News / Politics

மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் வட மாநிலங்களில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல குமரி மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் மகேஷ், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியபோது கூறியதாவது:-

மத்திய அரசு குறுகிய மனப்பான்மையுடன் குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளது. இதற்கு தமிழக அரசும் ஆதரவு தெரிவித்து உள்ளது. மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுகின்றன. எனவே மத்திய அரசு யோசித்து பார்க்க வேண்டும். சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைக்காது என்ற எண்ணத்தில் சில மதங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு பல மாநில முதல்-அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டங்கள் தீ போல பரவி வருகிறது. குமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்றால் எங்கு செல்வார்கள்?. எனவே மதத்தை வைத்து மக்களை பிரிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. ஆர்ப்பாட்டத்தையொட்டி தலைமை தபால் நிலையம் முன் உள்ள சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தக்கலை தபால்நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், பொன் ஆசைதம்பி், மாவட்ட மருத்துவ அணி அமைப்பா ளர் பிஸ்வகித் ஆல்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையொட்டி தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top