சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஜெர்மன் மாணவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்!

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஜெர்மன் மாணவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்!

in News / Politics

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மன் நாட்டு மாணவரை நாட்டை விட்டு வெளியேறக் குடியேற்றத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ரபிஹா என்ற மாணவி புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜகோப் லிண்டெந்தால் என்ற மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஜகோப் லிண்டெந்தால் ஐஐடியில் முதுகலை இயற்பியல் துறையில் படித்து வந்துள்ளார். இவருக்கு 2019 ஜூன் முதல் 2020 ஜூன் வரை விசா வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படித்து வந்த இவர் சென்னை முழுவதும் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்துகொண்டு வந்துள்ளார்.

ஜெர்மனியிலிருந்த ஹிட்லரின் ஆட்சியைக் குறிப்பிடும் வகையில் 1933 முதல் 1945 வரை, நாங்கள் அங்கே இருந்தோம் என்கிற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஹிட்லர் ஆட்சியையும், பிரதமர் மோடி ஆட்சியையும் மாணவர் ஒப்பிட்டுப் பார்த்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவில் தங்கிப் பயில்வதற்கான அனுமதியை இந்திய குடியேற்றத் துறை ரத்து செய்துள்ளது. மாணவர் விசா நடைமுறைகளை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவரது விசா காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து திங்கள் இரவு சென்னையிலிருந்து டெல்லி சென்ற மாணவர் அங்கிருந்து செவ்வாய் காலை 3.30மணியளவில் ஜெர்மனிக்கு விமானம் மூலம் செல்வதாக இருந்தது. ஆனால் அவரது விமானம் தாமதமானதைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து இன்று இரவு ஜெர்மனிக்குக் கிளம்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு மாணவர் அளித்த பேட்டியில், ”சென்னையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (FRRO) இருந்து நேற்று நண்பகலில் இந்தியாவை விட்டு வெளியேற வாய்மொழியாக உத்தரவிடப்பட்டேன், நான் விளையாட்டு நிகழ்வுக்காக சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றிருந்தேன். நேற்று காலை சென்னை வந்த பிறகு, குடியேற்றத் துறை அதிகாரிகளை உடனடியாக சந்திக்க என் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தினார். அவர்களைச் சந்தித்த போது இங்குத் தங்குவது தொடர்பாக சில நிர்வாகச் சிக்கல்கள் குறித்து எனக்குத் தெரிவித்தனர். அங்கிருந்த மூன்று அதிகாரிகள் என்னுடைய பொழுதுபோக்கு மற்றும் அரசியல் தொடர்பான சில கேள்விகளை எழுப்பினர். சிஏஏ மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் கேட்டனர். அவர்கள் பேர் எதுவும் தெரியவில்லை. உரையாடல்கள் முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தினர். அப்போது எழுத்துப்பூர்வமான கடிதம் கேட்டதற்கு, என்னுடைய பாஸ்போர்ட்டை கொடுத்து நீங்கள் வெளியேறலாம் என்று தெரிவித்துவிட்டனர். அதன் பிறகு ஐஐடி சென்று டிக்கெட் புக் செய்து, எனது பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறினேன்” என்றார்.

”நான் சென்னை ஐஐடி வளாகத்தை நேசிக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன், ஆனால் நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஜெர்மனியில், சட்டப்பூர்வமாக இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக, யாரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top