கோட்சேவை தேசபக்தர் என அழைத்ததற்கு மன்னிப்பு கோரிய பிரக்யா தாகூர்!

கோட்சேவை தேசபக்தர் என அழைத்ததற்கு மன்னிப்பு கோரிய பிரக்யா தாகூர்!

in News / Politics

கோட்சேவை தேசபக்தர் என அழைத்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பாஜக எம்.பி பிரக்யா தாகூர் மன்னிப்பு கோரினார்.

மக்களவையில் நேற்று முன்தினம் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர், காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனத் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரக்யா சிங் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டுமெனவும் சபாநாயகருக்கு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் மக்களவையில் நேற்று (நவம்பர் 29) இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த பிரக்யா தாகூர், “மக்களவையில் நான் பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி நாட்டுக்காக அளித்துள்ள பங்களிப்பை நான் மதிக்கிறேன். யாருடைய உணர்வுகளையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்தார்.

கோட்சே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “தீவிரவாதியான பிரக்யா தாகூர், தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என அழைக்கிறார். இது நாடாளுமன்ற வரலாற்றில் துக்க தினமாகும்” என்று சாடியிருந்தார். இதனை தனது உரையில் குறிப்பிட்ட பிரக்யா தாகூர், “இந்த அவையின் உறுப்பினர் என்னை தீவிரவாதி என்று அழைத்துள்ளார். இது எனது கண்ணியத்தை குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. என் மீதான எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

எனினும் பிரக்யா தாகூரின் மன்னிப்பை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், ‘மகாத்மா காந்திக்கு ஜே, கோட்சே டவுன், டவுன்’ என முழக்கங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்புவிடுத்தார். அப்போது, ‘பிரக்யா சிங் தன் மீதான புகாரை திசை திருப்பவே பார்க்கிறார். முழுமையாக அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகலில் அவை கூடியதும் எழுந்த பிரக்யா தாகூர், “நவம்பர் 27ஆம் தேதி எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் கோட்சேவை தேசபக்தர் என்று நான் எங்கேயும் அழைக்கவில்லை. நான் அவருடைய பெயரையே எங்கேயும் குறிப்பிடவில்லை. எனினும், நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, ‘இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த பிரச்சினையை நாங்கள் அரசியலாக்கக் கூடாது என நினைத்தோம்” என விளக்கம் அளித்தார்.

இதனிடையே பிரக்யா தாகூரை தீவிரவாதி என்று அழைத்த ராகுல் காந்திக்கு எதிராக அவையில் உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் ட்விட்டரில் என்ன பதிவிட்டேனோ அந்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன். ” என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top