முரசொலி நில விவகாரம் : தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு!

முரசொலி நில விவகாரம் : தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு!

in News / Politics

முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலி அலுவலக இடத்தின் பட்டாவை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட, இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வருகிறது.

இதற்கிடையே பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பதன் உண்மை நிலை குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தலைமை செயலாளரிடமிருந்து எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கு (நவம்பர் 5) மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், “பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகார் மனு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென அக்டோபர் 22ஆம் தேதியிட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். இதுகுறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வரும் 19ஆம் தேதி பகல் 12 மணிக்கு டெல்லி லோக்நாயக் பவனின் 5ஆவது தளத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது. ஆகவே, புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள், வழக்கு விபரங்கள் உள்ளிட்ட இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலம் தொடர்பாக மனு அளித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனும் அன்றைய தினம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top