மோடி தந்த ஆஃபர் பற்றி மனம் திறந்த ஷரத் பவர்!

மோடி தந்த ஆஃபர் பற்றி மனம் திறந்த ஷரத் பவர்!

in News / Politics

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி சில நாட்களுக்கு முன் அமைந்தது. அங்கே ஆட்சி அமைப்பது தொடர்பாக ஒரு மாதமாக நடந்த முயற்சிகள்மற்றும் அது தொடர்பாக நடந்த சந்திப்புகள் பற்றிய தகவல்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமர் மோடியை திடீரென சந்தித்தார். மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தொடர்பாக பிரதமரை சரத் பவார் சந்தித்துப் பேசினார் என்றுதான் அப்போது அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பதை இப்போது சரத் பவார் போட்டுடைத்துள்ளார்.

சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் திடீரென பிரதமரை சந்தித்தது ஏன் என்பது தொடர்பாக ஏபிபி மஜ்ஹா என்ற மராத்தி சேனலுக்கு பவார் நேற்று (டிசம்பர் 2) அளித்த பேட்டியில் மனம் திறந்தார் சரத் பவார்.

“விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றித்தான் பிரதமரிடம் பேசினேன். அதெல்லாம் பேசி முடித்துவிட்டு நான் புறப்படத் தயாரானபோது இருங்கள் என்று சொன்னார் பிரதமர். ‘நாட்டு நலனுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து செயல்படலாமே?’’என்று என்னிடம் நேரடியாகவே கேட்டார். நான் அவரிடம், ‘நம்முடைய தனிப்பட்ட நட்பு என்றும் தொடரும். ஆனால் அரசியல் ரீதியாக பிஜேபியோடு என்னால் சேர இயலாது’என்று சொன்னேன். அப்போது பிரதமர் மோடி, ‘விவசாயிகள் பிரச்சினை, வளர்ச்சி, தொழில்துறை இப்படி எல்லாவற்றிலும் உங்கள் கொள்கைதானே எங்கள் கொள்கையும். பிறகு ஏன், நாம் சேர்ந்து செயல்பட முடியாது? உங்கள் அனுபவம் எங்கள் அரசுக்குத் தேவை’என்று கேட்டார்.

அப்போது நான், ‘தேசியப் பிரச்சினைகளில் அரசோடு கண்டிப்பாக ஒத்துழைப்போம்.ஆனால் எங்கள் கட்சி சிறிய கட்சி. மகாராஷ்டிராவை மையமாக வைத்தே அதிகம் செயல்பட வேண்டியுள்ளது’என்று கூறிவிட்டு வந்தேன்”என்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவிக்கான ஆஃபர் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, “ ஆஃபர் அளிக்கப்பட்டது. ஆனால் அதுவல்ல. சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னார்கள்” என்று கூறியிருக்கிறார் ,

இதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைய பிரதமர் மோடியே சரத் பவாருடன் நேருக்கு நேர் பேசியிருப்பது வெளியே தெரியவந்திருக்கிறது. சரத் பவார் மோடியுடன் இணங்க மறுத்த நிலையில்தான் அடுத்த சில நாட்களில் அதிரடியாக அஜித் பவாருக்கு துணை முதல்வராக அதிகாலை பதவியேற்பு செய்து வைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்தவைதான் இந்தியாவுக்கே தெரியுமே.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top