மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை கவர்னரை சந்திக்க முடிவு!

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை கவர்னரை சந்திக்க முடிவு!

in News / Politics

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால், ஏற்பட்ட மோதலின் காரணமாக அந்த இரண்டு கட்சிகளாலும் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை. கவர்னர் விதித்த கெடுவுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதா அமைதி காத்து வரும் நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்களை நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினார். இந்துத்வா கொள்கையை கடைபிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், மராட்டியத்தில் புதிய கூட்டணி உருவாவது உறுதியானது. ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரும் முன்பு 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன.

40 அம்சங்கள் கொண்ட குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்று உள்ளது. இது இப்போது மூன்று கட்சிகளின் தலைவர்களுடன் பகிரப்படும். அவர்கள் இந்த வார இறுதிக்குள் இதற்கு அனுமதி வழங்குவர். நவம்பர் 19க்குள் இது இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச செயல்திட்டம் இறுதி வடிவம் பெற்றதால் தற்போது அதிகார பகிர்வு குறித்து பேசப்பட்டது. சிவசேனாவுக்கு 16 அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரசுக்கு 14 மற்றும் காங்கிரசுக்கு 12 என ஒரு பரந்த ஒருமித்த கருத்து உருவாகி வருவதாகத் தெரிகிறது.

காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி, சிவசேனாவிற்கு ஒரு துணை முதல்வர் பதவி கிடைக்கும். அதே நேரத்தில் சட்டமன்றசபைத் தலைவர் பதவி தேசியவாத காங்கிரசுக்கு கிடைக்கும்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

சிவசேனா முதல்வர் பதவிக்கு உரிமை கோரியுள்ளது. இது ஐந்தாண்டுகளாக இருக்குமா அல்லது இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் இருக்குமா, அல்லது அது காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மத்தியில் சமமான காலமாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அனைத்து பதவிகளும் அமைச்சரவை பதவிகளும் ஒருமித்த கருத்தினால் முடிவு செய்யப்படும் என்று வலியுறுத்திய தலைவர்கள், மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கு பின்னர் துணை முதல்வர் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டியத்தில் அரசு அமைப்பதற்கான செயல்முறை தொடங்கி விட்டது. தாங்கள் உருவாக்க போகும் அரசு 5 ஆண்டுகளுக்கு முழுமையாக செயல்படும் என கூறினார்.

இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை கவர்னரை சந்திக்க முடிவு செய்து உள்ளனர்.

விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை சந்திக்க கவர்னரிடம் நேரம் கேட்டு உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top