பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் போராடவில்லை : எதிர்க்கட்சி விமர்சித்த மோடி!

பாகிஸ்தானுக்கு எதிராக ஏன் போராடவில்லை : எதிர்க்கட்சி விமர்சித்த மோடி!

in News / Politics

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க-வினரும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி குறித்து அவ்வப்போது தங்களது விளக்கங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தும்கூர் நகர் அருகே அமைந்துள்ள சித்தகங்கா மடத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

பாகிஸ்தானில் உள்ள, மத சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக நீங்கள் கோஷம் இடுங்கள், நீங்கள் பேரணிகளை நடத்த வேண்டுமானால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தலித் மக்கள் விரட்டிவிடப்படுவதற்கு எதிராக பேரணிகளை நடத்துங்கள். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீங்கள் தர்ணாக்களை நடத்துங்கள். அதைவிடுத்து, நீங்கள் பாஜக மீது வெறுப்பைக் கக்காதீர்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.

அதாவது, இந்திய நாட்டில் நாடாளுமன்றத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தலித்துகள் உள்ளிட்ட பாகிஸ்தானில் கொடுமையை அனுபவித்து இந்தியா வரக்கூடியவர்களுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. பாகிஸ்தான் மதத்தின் பெயரால் பிரிந்து சென்ற ஒரு நாடு. அங்கு பிரிவினைக்குப் பிறகு, இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமண மதத்தினர் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள், இது நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படி விரட்டிவிடப்படக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதுவும் பேசவில்லை. அகதிகளாக வருபவர்களுக்கு எதிராகத்தான் இவர்கள் போராடுகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது நமது கடமை. அதில் பெரும்பாலானோர் இந்துக்களாக, இருக்கிறார்கள். தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாம் அவர்களை அப்படியே கண்டுகொள்ளாமல் விட முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது நமது கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு விஷயம். இது நமது தேசியக் கடமை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top