கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மதுவுக்கு இணையாக எளிதில் கிடைக்கும் போதை பொருளாக கஞ்சா மாறி உள்ளது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி போலீசார் கஞ்சா விற்பனையாளர்களை மடக்கி பிடித்து நடவடிக்கை மேற்கொண்டாலும் கூட, விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை. சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கத்துக்கு இப்போது பல மாணவர்கள் அடிமையாகி உள்ளனர்.
பலர் கஞ்சா போதையில் குற்றவாளிகளாகவும் மாறி வருகிறார்கள். சமீப காலமாக அடி, தடி வழக்குகள், திருட்டு வழக்குகளில் சிக்குபவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களாக உள்ளனர். சாதாரண பிரச்சனைக்கு கூட கத்தியால் குத்தும் அவல நிலை உருவாகி உள்ளதற்கு மதுவை விட கஞ்சா போதை தான் காரணமாக அமைந்து இருக்கிறது. இதை கட்டுப்படுத்தா விட்டால் இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து ரவுடியிசம், கொலைகள் அரங்கேறும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய சோதனையில் கஞ்சா பொட்டலத்துடன் மாணவன் ஒருவனை பிடித்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மாணவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க, போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த கோட்டார் அப்டா மார்க்கெட் அருகே வாலிபர் ஒருவரிடம் வாங்கியதாக கூறி உள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கஞ்சா கும்பல், ஒரு மாணவனை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, அந்த மாணவன் மூலமே, சக மாணவர்களை இந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி வருகிறார்கள். மதுரை, தேனி பகுதிகளில் இருந்து இரவு நேர பஸ்கள், ரயில்களில் அதிகளவில் கஞ்சா கொண்டு வரப்படுகிறது. இதே போல் ஆந்திராவில் இருந்தும் அதிகளவில் கஞ்சா நாகர்கோவிலுக்கு விற்பனைக்கு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் பலர் இப்போது குமரி மாவட்டத்தை வியாபார இடமாக மாற்றி இருப்பதால் தான் கஞ்சா எளிதில் கிடைக்கிறது சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். எனவே காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்க தவறினால் பல இளைஞர்களின் எதிர்காலம் பாழாகி விடும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்க அதிகளவில் வட மாநில வாலிபர்களின் வருகையும் காரணமாக அமைந்துள்ளது. பல்வேறு தொழில் நிமித்தமாக குமரியில் வந்து தங்கி உள்ள வட மாநிலத்தவர்கள் மூலம் இப்போது கஞ்சா அதிகளவில் புழக்கத்துக்கு வந்துள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் தொடங்கி பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள் சிலர் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை நடக்கிறது. உள்ளூர் வியாபாரிகள், பழைய வியாபாரிகளை குறி வைத்து கணக்கு காட்ட கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போலீசார் பிடியில் இந்த வட மாநில கும்பல் சிக்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதே போல் கேரள கல்லூரி மாணவர்கள் பலர் இங்கு வந்து வட மாநில கும்பலிடம் கஞ்சா வாங்கி செல்கிறார்கள்.
கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கஞ்சா விற்பனைக்கான வழக்கில் கைதானவர்களும் உண்டு. கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் இது பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். பள்ளி, கல்லூரி அருகில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள் என்று எஸ்.பி. ஸ்ரீநாத் கூறியிருந்தார்.
இந்நிலையில் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், கன்னியாகுமரியில் கஞ்சா புழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது மீதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments