இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்டில் சிமோன்ஸ் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி லெண்டில் சிமோன்சின் விக்கெட்டை இழந்தாலும் அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடிதனர். அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டிஸ் அணி 9.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த அற்புதமான கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர். பின்னர் இவின் லீவிஸ் 40 ரன்கள், பிரண்டன் கிங் 31 ரன்களில் நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் 56(41) ரன்களும், பொல்லார்டு 37(19) ரன்களும் விளாசினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தினேஷ் ராம்டின் 11(7) ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24(9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திரா சாஹல் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபல் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணியின் சார்பில், ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். அதில் ரோகித் சர்மா 8 (10) ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.அடுத்ததாக லோகேஷ் ராகுலுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் லோகேஷ் ராகுல் தனது அரைசதத்தை பதிவு செய்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த நிலையில் 62(40) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன், ரிஷாப் பாண்ட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த இந்த ஜோடியில் ரிஷாப் பாண்ட் 18(9) பந்துகளில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 4(6) ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷிவம் துபே, கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.
முடிவில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய விராட் கோலி 94(50) ரன்களும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 18.4 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக கேரி பியர் 2 விக்கெட்டுகளும், பொல்லார்டு மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
0 Comments