இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மே. இந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் பெற்றால் வெற்றி என்று இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் நல்ல தொடக்கம் அளித்தனர்..
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. இந்த நிலையில் ரோஹித் சர்மா 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுலும் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, வந்த ஷ்ரேயஸ் ஐயர் 7, ரிஷப் பந்த் 7, கேதார் ஜாதவ் 9 என தொடர்ந்து ஏமாற்றமளித்தனர். இதனால், இந்திய அணி 228 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து, இந்திய கேப்டன் கோலியுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா ஜோடி நல்ல வேகத்தில் ரன்களைக் குவித்தனர். இதனால் ரன்களைப் பெறும் வேகம் அதிகரித்தது. இந்நிலையில், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைபட்டது. அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகுர், வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடிக்க இந்திய அணியின் வெற்றி மிகவும் எளிதானது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
0 Comments