தெற்காசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் 30 தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்த இந்தியா!

தெற்காசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் 30 தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்த இந்தியா!

in Entertainment / Sports

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்தியா நேற்று அதிக அளவில் பதக்கங்களை அறுவடை செய்தது. நீச்சல், தற்காப்பு கலையான உசூ, பளுதூக்குதல், தடகளம், நீச்சல் ஆகியவற்றில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினார்கள்.

உசூ பந்தயத்தில் இந்திய வீரர்கள் சுராஜ் சிங், சுனில் சிங் (52 கிலோ), இந்திய வீராங்கனைகள் சனதோய் தேவி (52 கிலோ), பூனம் (75 கிலோ), திபிகா (70 கிலோ), சுஷிலா (65 கிலோ), ரோஷிபினா தேவி (60 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இந்திய வீராங்கனை பித்யாபதி சானு (56 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

நீச்சல் போட்டியில் இந்தியா 4 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலத்தை கைப்பற்றியது. இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர்கள் லிகித் செல்வராஜ் (2:14.67 வினாடி) தங்கப்பதக்கமும், தனுஷ் சுரேஷ் (2:19.27வினாடி) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இதன் பெண்கள் பிரிவில் அபெக்‌ஷா டெல்யா முதலாவதாக வந்தார். பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் திவ்யா சதிஜா (1:02.78 வினாடி) தங்கப்பதக்கமும், அபெக்‌ஷா டெல்யா வெள்ளிப்பதக்கமும், இலங்கையின் அனிகா வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பெண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

பளுதூக்குதலில் இந்திய வீராங்கனைகள் ஜிஹிலி டாலாபெஹீரா (45 கிலோ பிரிவு) மொத்தம் 151 கிலோ எடையை தூக்கியும், 18 வயதான சினேகா சோரென் (49 கிலோ) மொத்தம் 157 கிலோ எடையை தூக்கியும், சரோஹாபம் பிந்தியராணி தேவி (55 கிலோ) மொத்தம் 181 கிலோ எடையை தூக்கியும் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர். இந்திய வீரர் சித்தாந்த் கோகோய் (61 கிலோ) மொத்தம் 264 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

தற்காப்பு கலையான தேக்வாண்டோ போட்டியில் இந்திய வீராங்கனைகள் புர்வா தத்தாத்ரி தீட்சித் (49 கிலோ), ருசிகா பாவ் (67 கிலோ), மார்கரெட் மரியா (73 கிலோ) உள்ளிட்டோர் மகுடம் சூடினர். இந்திய வீரர்கள் நீரஜ் சவுத்ரி (58 கிலோ), அக்‌ஷய் ஹூடா (87 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், லக்‌ஷயா (80 கிலோ) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

தடகள போட்டியில் டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் இந்திய வீரர்கள் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் (16.47 மீட்டர்) தங்கப்பதக்கமும், முகமது சலாவுதீன் (11.16 மீட்டர், தமிழ்நாடு) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார்கள். 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேந்தர் ஜெயக்குமாரும், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அபர்ணா ராயும், 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிரியா ஹப்பதன்னஹல்லியும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜீவனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தியா 30 தங்கம், 18 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்தை அள்ளியது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறது. நேபாளம் 36 தங்கம், 27 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், இலங்கை 17 தங்கம், 35 வெள்ளி, 55 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top