உலக ரேபிட் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி ‘சாம்பியன்’

உலக ரேபிட் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி ‘சாம்பியன்’

in Entertainment / Sports

அதிவேகமாக காய்களை நகர்த்தி விளையாடக்கூடிய உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவு போட்டி 12 ரவுண்ட் கொண்டதாகும். 122 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, கடைசி ரவுண்டில் சீனாவின் டான் ஜோங்கியை வீழ்த்தினார். டான் ஜோங்கி முதலில் டிரா செய்ய முன்வந்தார். ஆனால் அதை ஹம்பி ஏற்க மறுத்துவிட்டார். அதை தொடர்ந்து சில வினாடிகளில் நேர நெருக்கடியால் ஜோங்கி தவறிழைக்க, வெற்றி ஹம்பியின் வசம் ஆனது. அதே நேரத்தில் சாம்பியன் வாய்ப்பில் இருந்த சீனாவின் லீ டிங்ஜீக்கு கடைசி சுற்றில் டிரா செய்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் கடைசி ரவுண்டில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

12 சுற்று முடிவில் கோனெரு ஹம்பியும், லீ டிங்ஜீயும் தலா 9 புள்ளியுடன் சமநிலை வகித்தனர். இதையடுத்து கடை பிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் தோற்ற கோனெரு ஹம்பி, அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

குழந்தை பெற்றுக் கொண்டதால் 2016-ல் இருந்து 2018-ம் ஆண்டு வரை ஓய்வில் இருந்த இந்திய கிராண்ட்மாஸ்டரான ஹம்பி, மறுபிரவேசம் செய்த ஓராண்டுக்குள் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த 32 வயதான ஹம்பி கூறுகையில், ‘3-வது நாளில் எனது முதல் ஆட்டத்தை தொடங்கிய போது முதலிடத்தை பிடிப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. டாப்-3-க்குள் வருவேன் என்று நம்பினேன். டைபிரேக்கர் போட்டியில் விளையாட வேண்டி வரும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறி பரவசப்பட்டார். இந்த பட்டத்தை கைப்பற்றிய 2-வது இந்தியர் ஆவார். ஏற்கனவே 2017-ம் ஆண்டில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இந்த வகை பட்டத்தை வென்று இருக்கிறார். கோனெரு ஹம்பிக்கு, ஆந்திரா முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top