புல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்!

புல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்!

in News / Weather

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து உள்ளது.

இதனால் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் மீனவர்கள் அடுத்த 12 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோன்று வடக்கு வங்காள விரிகுடா பகுதிக்கும் அடுத்த 18 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த புயலால் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது. வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது.

வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி புல்புல் புயல் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என வங்காளதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், புயலால் கடல் வழக்கம்போல் இல்லாமல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போலா, பர்குனா மற்றும் பத்துவாகாளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 150 மீனவர்களை நேற்றிரவு முதல் காணவில்லை.

கடலோர மாவட்டங்களில் இருந்து குடிமக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 5,500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 19 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த பணியில் 55 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியில், இதழியல் துறையை சேர்ந்த மாணவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் சிக்கியுள்ளனர். 1,600 மருத்துவ குழுக்கள் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளன. ராணுவ படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என மந்திரி ரகுமான் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top