நாகர்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 12½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில் மேலராமன்புதூர் தளவாய்புரம் ரோட்டை சேர்ந்தவர் முருகன் (வயது 62). இவருடைய மனைவி கவுசல்யா. முருகனின் தம்பி மகன் திருமணம் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது. அதில் முருகனும், கவுசல்யாவும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சுசீந்திரம்-ஆஸ்ராமம் சாலை காக்கமூர் ஜங்ஷன் அருகே பகல் 12.30 மணிக்கு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது அதை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். பின்னால் உட்கார்ந்து இருந்தவர் முககவசம் அணிந்து இருந்தார். அவர் திடீரென்று கவுசல்யா கழுத்தில் அணிந்து இருந்த 12½ பவுன் சங்கிலியை பறித்தார். உடனே கவுசல்யா திருடன்… திருடன்… என்று கூச்சல் போட்டார். அதற்குள் மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. பறித்து செல்லப்பட்ட தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இதுபற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது அதில் சங்கிலி பறிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது. அந்த பதிவை கவுசல்யாவிடம் காட்டிய போது அவர்கள் தான் தங்க சங்கிலியை பறித்து சென்றனர் என்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நாகர்கோவில் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments