உள்நாட்டு வியாபாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையத்தளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இணையத்தளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் , பிளிப்கார்ட் போன்றவை தங்கள் நிறுவன பொருட்களை விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் சில முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களின் ஏதேனும் ஒரு பொருளை தங்கள் இணையதளம் மூலம் பிரத்தியேகமாக விற்பதும் தடுக்கப்படுகிறது, அதேபோல் எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை 25 விழுக்காட்டிற்கு மேல் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் விற்க கூடாதென விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கேஷ் பாக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கும் நடைமுறையை பாகுபாடின்றி வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என ஆடிட்டர் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கவும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.
பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் வழங்கும் அதிரடி தள்ளுபடியால் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக உள்நாட்டு வியாபாரிகள் புகார் அளித்துள்ள நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் பெப்ரவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வருகின்றன.
0 Comments