ஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஐ.டி.துறை!

ஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஐ.டி.துறை!

in Technology / Business

ஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில் இந்தியாவின் மிக பெரிய ஐ.டி நிறுவனமான இன்போசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ், காக்னிஸண்ட் போன்ற முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஐ.டி.ஊழியர்கள் மத்தியில் வேலையை இழக்கும் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில், மூத்த மேலாளர்களாக பணியாற்றும் படிநிலை 6-ல் இருக்கும் ஊழியர்களில் 10 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறார்கள். சம்பளப் படிநிலை 6, 7 மற்றும் 8-ல் சுமாராக 30,000 பேர் வேலை பார்க்கிறார்கள். சுமாராக 2,200 பேர் வரை தங்கள் வேலையை இழக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பள படிநிலை 6, 7, 8-ல் பலரை வேலையை விட்டு நீக்குவது போக, சம்பள படிநிலை 4 மற்றும் 5-ல் இருந்தும் பல மூத்த அதிகாரிகளை இன்போசிஸ் வெளியேற்றவுள்ளது. இந்த எண்ணிக்கை சுமார் 10,000 பேரைத் தொடலாம் என்கின்றன நிலவரங்கள். சமீபத்தில் காக்னிஸன்ட் நிறுவனம் 7,000 ஊழியர்களை குறைக்க உள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 5 முதல் 10 சதவிகிதம் வரை நடுத்தர அளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் நேற்று(நவம்பர் 7) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “தற்போது டிஜிட்டல் துறை அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் சேவையை எதிர்பார்ப்பதில் விளைவாக நிறுவனங்கள் தங்களை கூடுதல் செயல் திறன் மிக்கதாகவும், தேவையில்லாத செலவை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. அதனால் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்த ஊழியர்களைத் தவிர, பிற ஊழியர்களின் எண்ணிக்கை நிறுவனங்களுக்கு சுமையாக உள்ளன. எனவே அவர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் நடுத்தர அளவிலான ஊழியர்கள் கணக்கு மட்டும் 20 முதல் 30 சதவீதம் இருக்கும் என எகனாமிக் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து வி.பாலகிருஷ்ணன் கூறியபோது, “தற்போது இந்தியா பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலையை சந்தித்து வந்தாலும், அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த சூழ்நிலையை ஐடி நிறுவனங்கள் இன்னும் கவனமாக கையாண்டால் அடுத்த வருடத்திலும் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்’ எனக் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top