நன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க!

நன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க!

in Society / Cover Story

சுளீரென அடிக்கும் வெயில், கண்ணே கிறங்கும் அளவுக்கு மண்டையைப் பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நாம் குடிப்பது பெப்சி, கோக் போன்ற பலவகையான பானங்களை தான். என்னதான் கூல்டிரிங்ஸ்களை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது. ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று கேட்பார்கள். இந்த நன்னாரி சர்பத் சுவையும்,வரலாறும் வித்தியாசமானது.

அதிகப்படியான முதலீடு கொண்டு சினிமா ஹீரோ ,ஹீரோயின்களை வைத்து அசுரத்தனமான பகட்டு விளம்பரங்களை செய்து இந்தியாவில் கார்ப்ரேட் கூல்டிரிங்ஸ் கம்பெனிகள் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 93 சதவிகிதம் அமெரிக்க பானங்களிடம் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

உலகம் முழுவதும் குளிர்பானங்களை அதிகம் குடிப்பதன் காரணமாக ஆண்டுக்கு 1,80,000 பேர் இறந்துபோகிறார்கள் என்று அமெரிக்க மருத்துவக்கழக அறிக்கைச் சொல்கிறது. அதில் சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,000. இதய பாதிப்பு காரணமாக இறந்துபோகிறவர்கள் 44,000 பேர். ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் 6.000 பேர் இறந்துபோகிறார்கள் அறிக்கை மிரள வைக்கிறது.

உலகிலே அதிகப்படியான கூல்டிரிங்ஸ்களைக் குடிக்கும் நாடு மெக்சிகோ. குறைவாகக் குடிப்பவர்கள் ஜப்பானியர்கள். செயற்கை கூல்டிரிங்ஸ்கள் அறிமுகமாவதற்கு முன்பு வரை தமிழகத்தில் புகழ்பெற்றிருந்தது சர்பத். எல்லாப் பெட்டிக் கடைகள் தோறும் சர்பத் கிடைக்கும். சில வீட்டுகளிலும் சர்பத் தயாரிப்பார்கள். சர்பத், எலுமிச்சை சாறில் தயாரிக்கப்படுவது. அதிலும் குறிப்பாக நன்னாரி சாறு சேர்த்து உருவாக்கப்படும் சர்பத் குளிர்ச்சியானது. நன்னாரி என்றால் நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்லுவார்கள். இது ஒரு மருத்துவ மூலிகை. இதன் வாசனை மாகாளி கிழங்கை போல இருக்கும். நன்னாரியில் சீமை நன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி எனப் பலவகை உண்டு. உடல் உஷ்ணம் தணிய நன்னாரி வேரை மண் பானை நீரில் போட்டு வைத்து குடிநீராகப் பயன்படுத்துவது பண்டைய மக்களின் வழக்கம். சர்பத் என்பது உருது சொல். சர்பா என்ற சொல்லில் இருந்து சர்பத் என்கிற சொல் உருவானது என்பார்கள்.

முகலாய மாமன்னர் பாபர் வழியாகத்தான் சர்பத் இந்தியாவுக்கு வந்தது என்கிறார்கள். பாபர் நாமாவில் இதுபற்றிய குறிப்பும் காணப்படுகிறது. சர்பத் என்பதன் பொருள் குடிப்பதற்கானது என்பதாகும்.
இந்தியா எங்கும் முகலாயர்களே சர்பத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். சர்பத் பெர்ஷியாவிலும் புகழ்பெற்ற பானம். குறிப்பாக துருக்கியிலும் ஈரானிலும் உணவுக்கு முன்பாகக் குடிக்கப்படும் பானமாக சர்பத் இன்றும் இருந்து வருகிறது.

மாமன்னர் ஜஹாங்கீர் ஃபலூடா சர்பத் குடிப்பதை விரும்பக் கூடியவர். இந்த சர்பத் பாலில் உருவாக்கப்படுவதாகும். ஆப்பிள், பேரி, பீச், திராட்சை, மாம்பழம் போன்ற பழச்சாறுகள், ரோஜா இதழ்கள், மூலிகைகளைக் கொண்டும் சர்பத் தயாரிக்கப்படுகிறது. முகலாயர்கள் காலத்தில் 134 வகை சர்பத், அவர்களது அரண்மனையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

நன்னாரியின் வேருக்கு உடலைக் குளிர்ச்சியாக்கும் ஆற்றல் உள்ளதென்று சித்த மருத்துவம் சொல்கிறது.

‘சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை
யெலாமொழிக்கும் மென்மதுர நன்னாரி வேர்’

என்கிறது அகத்தியர்குணபாடம். நன்னாரியின் வேரை நீரில் உறவைத்து வடிகட்டிக் குடிப்பது உடல் உஷ்ணம் தணிக்க நம் முன்னோர் கையாண்ட முறை, வேர் ஊறிய நீரைக்குடிப்பது சுவைக்காது என்பதால் சர்க்கரைபாகுடன் கலந்து சுவை கூட்டினர்.அதுவே நன்னாரி சர்பத் என்று சந்தையில் விற்பனையாகிறது என்றும் சொல்கிறார்கள்.இந்த சர்பத்துடன் எலுமிச்சை பழசாறும் நீரும் கலந்து நன்னாரி சர்பத் என்ற பெயரில் பெட்டிக்கடைகளில் விற்பது வழக்கம்.

சர்பத் முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வித்யாசமான ருசி தெரிந்து விடுகிறது. ஒரு வாய் எலுமிச்சை சாறு குடித்த பின்னர் ஏதேனும் ஸ்வீட் சாப்பிட்டால் அதிகம் புளிப்பு, அதிகம் இனிப்பு என்று உணர முடியும். அதுவே நன்னாரிசர்பத் குடிக்கும் போதும் நிகழ்கிறது.பொதுவாக சர்பத் போடும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுவார்கள். சர்பத் குடிக்கும்போது அந்த புளிப்பு சுவை இருந்துகொண்டே இருக்கும், சில நேரங்களில் எலுமிச்சை பழத்தின் கொட்டை வாயில் சிக்கும்போது அதன் மேலே இருக்கும் அந்த புளிப்பு சுவையை தடவி எடுத்துவிட்டு அதை வெளியில் துப்புவார்கள். அப்போது இனிப்பும், புளிப்பும் என்று மாறி மாறி வரும் அந்த சுவையே சர்பத்தின் வெற்றி எனலாம். புளிப்பும் இனிப்பும் அந்த சில்லென்ற சுவையினில் உள்ளே செல்ல செல்ல வயிற்றில் அந்த குளுமையை உணர முடியும்.

சர்பத் என்கிற பானம் 19-ம் நூற்றாண்டு கால நாவல்களில் வருகிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நன்னாரி சர்பத்தில் கலர் பொடி சேர்த்து சிவப்பு கலராக மாற்றினார்கள். அதன் பின் நன்னாரி சர்பத்தில் நுங்கு சேர்த்து நுங்கு சர்பத்தாக புழக்கத்தில் வந்தது. நுங்கு சர்பத்தை கர்ப்ப காலங்களில் பெண்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் என எப்போதும் தென் தமிழ்நாட்டு மக்களிடம் நுங்கு சர்பத் அதிகம் பயன்படுத்தபடுகிறது.

நன்னாரி சர்பத்

வெயில் காலத்துக்கு மிக அவசியமானது. நோய் வராமல் காக்கும். குளிர்ச்சியை கொடுக்கும் முன்பெல்லாம் கோடை வந்து விட்டாலே சர்பத் கடைகள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கிவிடும். அந்தக் கடைகளில் எல்லாம் நன்னாரி சர்பத் வியாபாரம் அமோகமாக கொண்டு நடக்கும். வெளிநாட்டு குளிர்பானங்களான கோக்,பெப்சி நிறுவனங்களின் தயாரிப்புகள் தற்போது பெட்டிக்கடைகளை நிரம்பத் தொடங்கிய பின் நிலைமை தலைகிழாய் மாறிப் போனது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத நன்னாரி சர்பத்தை கைவிட்டு விட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு இணையான பானங்களை தேடி மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நன்னாரி சர்பத்துகள் இருக்குமிடம் தெரியாமல் காணாமல் போய் கொண்டிருக்கின்றது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top