செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

in Society / Cover Story

கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், இந்திரனுக்கும் உள்ள தொடர்புக் குறித்தக்கதைகள் பல உண்டு. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் மருந்துவாழ்மலை இருக்கிறது. அதன் பின்னால் மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று "தேவேந்திரன் பொத்தை" என்று அழைக்கப் படுகிறது . இங்கு தான் தேவர்களின் தலைவன் இந்திரனின் குகைக் கோயில் உள்ளது.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

ஆள் நடமாட்டம் இல்லாத தேவேந்திரன் பொத்தையைச் சுற்றிலும் மரம் செடியும் மலைப் பகுதியில் காணப்படுகின்றன. தரைமட்டத்தில் இருந்து 360அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோயில். பாறை மீது ஏறிச் செல்ல ஒரு பாதம் அளவிலான படிக்கட்டுகள் வழியாக கம்பியைப் பிடித்துக் கொண்டு தான் போக முடியும். இந்திரன் கோயில் இருக்கும் பகுதி ஒரு பெரிய பாறையின் அடிவாரம். இங்கு இயற்கையாக அமைந்த குகையில் இந்திரனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. நான்கு கரங்களோடு இந்திரன். அருகே சிவனும் பார்வதியும் அகத்தியத்தியரும் சிவலிங்கமும். இந்திரன் நின்றக் கோலத்தில் இரு கைக் கூப்பி அருள்பாலிக்கிறார். இந்திரன் பார்க்கும் திசையில் இருந்து பார்த்தால் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் கோபுரம் தெரிகிறது. தேவேந்திரன் பொத்தையில் இருந்து இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.

இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதை

ராமயணத்தில் அகலிகையின் கதை, பாலக் காண்டத்தில் வருகிறது. அகலிகை பஞ்ச கன்னியரில் ஒருத்தி. பிரம்மாவின் படைப்பில் பேரழகியான, அவளை அடைய இந்திரனும் விரும்பினான். கௌதம முனிவரும் விரும்பினார். இருவருக்கும் நடந்தப் போட்டியில் கௌதமர் வெற்றிப் பெற்றார். இந்திரன் அகலிகையை ஒருமுறையாவது கூட வேண்டும் என ஆசைப்பட்டான். இந்திரன், கௌதம முனிவர் இல்லாத நேரத்தில் அகலிகையை சந்திக்க விரும்பினான். கௌதமர் அதிகாலையில் கங்கைகரையில் அனுஷ்டானம் செய்ய செல்வது வழக்கம். இது இந்திரனுக்கும் தெரியும். அதனால் நடுச்சாமத்தில் கௌதமரின் ஆசிரமத்திற்கு இந்திரன் சென்றான். கோழியாக உருமாறி இந்திரன் கூவினான். கௌதமரும் விடிந்து விட்டது என எண்ணி கங்கைக் கரைக்கு சென்றார். முனிவர் ஆசிரமத்தை விட்டு அகன்றதும் இந்திரன் கௌதமரைப் போல வடிவம் எடுத்தான். ஆசிரமத்தில் தனியே இருந்த அகலிகையை சந்தித்தான். அகலிகையோ, இந்திரனை முனிவர் என நம்பினாள். அவனது ஆசைக்கு இணங்கினாள். இந்த நேரத்தில் ஏதோ சூழ்ச்சி நடந்து விட்டது என உணர்ந்த கௌதமர் ஆசிரமம் திரும்ப, அங்கே இந்திரனைக் கண்டார். இந்திரன் துரோகம் செய்ததை கண்ணால் கண்ட கௌதமர் கமண்டலத்து நீரைக் கையிலே விட்டு "பிறர் மனைவியைப் பெண்டாளும் உனக்குச் சாபம் தருகிறேன். நீ ஒரு யோனியை விரும்பி இந்த பாவத்தைச் செய்தாய். அதனால் உன் உடம்பெல்லாம் யோனியாகட்டும் " என்றார். அகலிகையை கல் ஆகுமாறு சாபமிட்டார். இந்திரன் வெட்கித் தலைகுனிந்தான். அவன் உடம்பெல்லாம் யோனி உண்டாகி அவன் தேஜஸ் மறைந்தது. தேவலோக மங்கைகள் அவனை கண்டு ஒதுங்கினார்கள். அவன் கௌவுதமரின் சாப விமோசனத்துக்காக அலைந்தான். அப்போது ஒரு முறை வியாழப் பகவானிடம் சென்று குறைப்பட்டான். வியாழப் பகவான், இந்திரனிடம் "தேவர்களின் தலைவனே, நீ செய்த பாவத்தைப் போக்க வழியுண்டு. வனங்களில் சிறந்ததான ஞானகான வனம் பூவுலகில் உண்டு. அங்கே மும்மூர்த்திகளின் அம்சமான தாணுமாலயன் கோயில் கொண்டுள்ளான். அவன் அருளால் உன் பாவம் கரையும். நீ அவனைப் பூஜைச் செய் . இப்போதே பூவுலகம் செல்வாய் " என்றார். இந்திரன் படை பரிவாரம் புடைசூழ ஞானகான வனம் சென்றால் தாணுமாலயனின் மனம் நெகிழாது என நினைத்தான். அதனால் தேவர் உலகில் இருந்து தனியாக புறப்பட்டான். அவனது தேர் தானாக வந்து ஞானகானத்தின் ஒரு பகுதியில் போய் நின்றது. தேர் நின்ற இடம் தேரூர் எனச் சிறப்பு பெயர் பெற்றது. இந்திரனின் யானை ஐராவதம் "சித்தர்கிரி" என அழைக்கப்பட்ட மருந்துவாழ்மலைக்கு வந்தது. இந்திரன் நின்ற திசையை நோக்கி வணங்கியது. அங்கே தனது தந்தத்தால் கீறி, ஒரு தீர்த்த கூடத்தையும் உண்டாக்கியது. இந்திரன் அதற்கு "ஔஷத தீர்த்தம்" எனப் பெயர் வைத்தான்.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

ஞான வனத்தில் தவம் இருந்த இந்திரன் பூஜைக்கு நதியின் நீர் வேண்டும் என நினைத்தான். அவனது எண்ணத்தை அறிந்த ஐராவதம் தன் கொம்பை தரையில் ஊன்றிக் கிளறியது. அதிலிருந்து ஒரு ஆறு தோன்றிப் பாய்ந்தது. அந்த ஆறு ஓடிய இடம் கோட்டாறு எனப்பட்டது. இந்திரனின் தவம் பலித்தது .அவன் முன்னே தாணுமாலயன் தோன்றினான் . இந்திரனின் சாபம் நீங்க அருள் செய்தான். இந்திரனும் தன் பழைய உருவத்தை அடைந்தான். இந்திரன் விரும்பிய அந்த தலம் சுசீந்திரம் ஆனது. இந்திரன் இப்போதும் சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலில் நடு இரவில் வந்து பூஜிக்கிறான் என்பது ஐதீகம். இந்திரனின் நடு இரவுப் பூஜையின் போது பூஜைப் பொருட்களும் அலங்கார முறைகளும் இடம் மாறும். அதனால் அடுத்த நாள் காலையில் பூஜை செய்யும் நம்பூதிரி இந்திரன் பூஜை செய்ததை தெரிந்து விடுவார் என்பதால் காலை பூஜையை வேறு நம்பூதிரியே செய்வது சுசீந்திரம் கோயிலின் வழக்கம். இதை சுசீந்திரம் தலபுராணக் கதையும் சொல்கிறது. இந்திரன் தேவேந்திரப் பொத்தையில் இருந்து தான் தினமும் நடு இரவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு பூஜை செய்ய புறப்படுவாராம். கோயிலில் பூஜை செய்து விட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே வந்து விடுவார் என்பது நம்பிக்கை.

இந்திரன் கோயில் பற்றி

இந்திரன் கோயில் இருக்கும் இடம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக மலைப்பகுதி இருந்தது. அதில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. மலையின் அடிவாரத்தில், கல் சிற்பி ஒருவர் அம்மி, குழவி கொத்திக் கொண்டிருந்தார். திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் பேரிரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. மாலை ஆறு மணி அளவில் மேளத் தாளங்கள் முழங்கி குரவை ஒலி கேட்டுக் கொண்டிருந்ததாம். அதனை சிற்பி கேட்டும் கேளாமலும் இருந்துள்ளார். அப்படி ஒரு நாள் வெள்ளிக் கிழமை சாயங்காலம் பேரொலி கேட்டது. அதில் பெரிய மணியின் ஓசையும் சேர்ந்தே ஒலித்தது. செங்குத்தான மலைப் பகுதியில் வழித் தடம் இல்லாமல் இருந்துள்ளது. கஷ்டப்பட்டு மலையில் ஏறி 360 அடிக்கு மேல் இருக்கும் இடத்துக்கு வந்ததும் அதிசயத்தில் மெய் மறந்து நின்றார். எதிரே பாறையில் நின்றக் கோலத்தில் தேவேந்திரன் சிலை ,சிவன் ,விநாயகர்,முனிவர் வடிவங்களோடு கூடிய குடைவரைக் கோயில். சிறிது நேரத்தில் இடி மின்னலோடு பெரும் மழை பெய்தது. சுற்றிலும் மழை மேகம் கௌவியபடி மூடி மறைந்தது. கண்களுக்கு சிலை மட்டும் தெரிந்தது. மேலே ஒரு குகை அதில் யானை ஒன்று நின்று துதிக்கையை அசைப்பது போல கண்களுக்கு தெரிந்தது. சிற்பி மனமுருக வேண்ட மழை நின்றது. மெதுவாக பாறையைப் பிடித்து கீழே இறங்கி வீட்டுக்கு வந்த சிற்பி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

திடீரென ஒரு நாள் சிற்பியின் கனவில் இந்திரன் வெள்ளையானையின் மேல் இருந்து "என்னை மக்கள் காண வருவதற்கு மலை அடிவாரத்தில் இருந்து படிகளை அமைக்க வேண்டும். அது உன் கடமை" என்று சொல்லி மறைந்து விட்டார். சிற்பி கனவு குறித்து யாரிடமும் சொல்லாமல் சில நாட்கள் கழித்து ஐந்து கால்விரல்கள் மட்டும் படும்படி வீதி கொண்ட 360 படிகளைப் பாறையில் கொத்தி அமைத்தார். பின்னர் பக்தர்கள் 360 சிறிய படிகளையும் அரையடி நீளம், அரைஅடி அகலம் உள்ளதாக மாற்றி, கோயிலுக்கு அனைவரும் ஏறிச் செல்ல பிடிகம்பிகளை துளைப் போட்டு மூன்று அடி தூரத்திற்கு பாறையிலே நட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்திரன் கோயில் ஒலைக் கொண்டு வேயப்பட்டும் இருந்தது. அதன் பின் ஷீட் கொண்டு அமைக்கப் பட்டது. இப்போது சிறிய காங்கிரிட் கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இப்போது திங்கள் கிழமை, வெள்ளிக் கிழமைகளை காலையில் பக்தர்கள் வந்து இந்திரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கிச் செல்கின்றனர்.

வற்றாத சுனையும்,குகையும்

இக்கோயிலில் வற்றாத இரண்டு சுனைகள் உண்டு. இந்திரனின் ஐராவதம் தந்தத்தைக் கொண்டு சுனைகளை கீறியதாக நம்பிக்கை. இரண்டு குகைகளும் உண்டு ஒன்று பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளது. இன்னொரு குகை வழி தவழ்ந்து வெளியே வந்தால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு. பெண்கள் சுனையில் குளித்து விட்டு தலை துடைக்காமல் நீரத்தோடு குகைவழி தவந்து வந்தால் பாவம் நீங்கி நோய்நொடிகள் மாறும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அமாவாசை, பௌர்ணமி தியதிகளில் சுனை நீரில் தீர்தமாடினால் பித்ருக்களால் நன்மை கிடைக்கும், பழிபாவங்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

குழந்தை வரம்

பெண்கள் தங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், இக்கோயிலில் வந்து இந்திரனை வேண்டி கொள்வார்கள். ஆண்குழந்தை பிறந்தால் இந்திரன் என்று பெயரிடுவேன். பெண் குழந்தை பிறந்தால் "தெய்வயானை" என பெயர் சூட்டுவேன் என்று கூறி வணங்கி செல்வார்கள். தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் அப்படியே குழந்தைக்கு பெயர் சூட்டி ஓராண்டு கழித்து இந்திரன் கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகளை செய்வார்கள். தேவேந்திரன் மலையைச் சுற்றி உள்ள பல கிராமங்களில் இந்திரன் என்கிற பெயர் பரவலாக காணப்படுகிறது. பூப்படையாமல் இருக்கும் பெண்கள் இந்திரன் கோயிலுக்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால் சீக்கிரம் பூப்படைவார்கள் என்பது நம்பிக்கை. தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்திரன் வழிபாட்டில் கலந்துக் கொண்டு இந்திரனின் அருளை பெறுகின்றனர்.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

சன்னதிகள்

இந்திரன் சன்னதிக்கு வலது புறம் ,ஆஞ்சிநேயர் சன்னதியும்,அதற்கு வலது புறத்தில் முருகன் வள்ளி தெய்வானையோடு அருள்பாலிக்கும் சன்னதியும், இந்திரன் சன்னதிக்கு இடது புறம் தேவி சன்னதியும் ,ஐயப்பன் சன்னதியும் அமைந்துள்ளன. இந்திரன் கோயிலுக்குச் செல்ல மலையேறும் போது வலது புறத்தில் காயத்திரி அம்மன் சன்னதியும் உள்ளது.

செல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.

பூஜை

திங்கள் கிழமையும், வெள்ளிக் கிழமையும் சிறப்பு பூஜை இந்திரனுக்கு செய்யப்படுகிறது. தினமும் காலை 7 மணிக்கு பூஜை செய்யப் படுகிறது. திருகார்த்திகை அன்று தீபமேற்றி, கொழுக்கட்டைப் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது. அன்று இந்திரனை பூஜை செய்து வழிப்பட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை சிறப்பு பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மே மாதம் ஜோதி நட்சத்திரத்தில் இந்திரனுக்கு வருஷாபிஷேகம் இரண்டு நாள் நடக்கிறது. அப்போது கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாரதனை, அன்னதானம் நடக்கும் போது அதிக அளவில் பக்தர்கள் இந்திரனை வழிப்பட்டு அருளை பெற்றுச் செல்கிறார்கள்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top