சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

in Society / Cover Story

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பழமையான கோவில்களில் ஓன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில். இக்கோவில் தெற்கு ,வடக்காக அமைந்துள்ளது . தெற்கு வாசல்வழியாகச் சென்று வடக்கு நோக்கி முன்னுதித்த நங்கை அம்மனை தரிசிக்க வேண்டும். நாஞ்சில் நாட்டில் நங்கை என்னும் ஒட்டுப் பெயர் உள்ள பெண் தெய்வங்கள் அதிகம். அழகியபாண்டியபுரம் வீரவ நங்கை, தெரிசனங்கோப்பு ஸ்ரீதர நங்கை, பூதப்பாண்டி அழகிய சோழன் நங்கை ,குலசேகரபுரம் குலசேகர நங்கை என பல நங்கைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாடு பெறுகின்றன. முன்னுதித்த நங்கை அம்மன் பற்றிய கதை சுசீந்தரம் கோயில் தலபுராணம் உடன் இணைந்தது. இந்த நங்கை கார்த்தியாயினி என்றும் இவள் இந்திரனால் பூஜிக்கப்பட்டவள் என்றும் நம்பிக்கை.

இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூவரும் தங்களது புருஷன்மார்கள் மீண்டும் பழைய வடிவம் பெற கார்த்தியாயினி நோன்பு இருந்த போது காட்சி கொடுத்த தாய் தெய்வம் முன்னுதித்த நங்கை அம்மன். கௌதமரின் சாபம் நீங்க இந்திரன் வேள்வி செய்த போது ஜோதி ரூபியாக முன் உதித்தவள் இவள். இந்திரன் 300 கன்னியர்களை சாட்சியாக வைத்து பூஜித்த போது தோன்றியவள் முன்னுதித்த நங்கை அம்மன் என்னும் கதைகளும் வழக்கில் உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் விழாவில் தொடக்கத்திலும் ,முடிவிலும் சிறப்பு வழிபாடுகளை முன்னுதித்த நங்கை அம்மன் பெறுகிறாள். தாணுமாலயன் கோவில் விழாவின் முதல்நாள் ஆங்கார பலி சடங்கும். தேர் திருவிழாவின் முதல்நாள் இரவு ஜெபம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் நடக்கும். 10 -ம் நாள் விழாவில் வட்டப் பள்ளி ஸ்தானிகர் இக்கோவிலில் மௌன பலி நடத்துவார். நவராத்திரி முடிந்த அடுத்த நாள் விஜயதசமியில் இக்கோவில் உற்சவ விக்கிரகம் திருவனந்தபுரத்திற்கு பரிவேட்டை எழுந்தருளி செல்லும்.இக்கோவிலின் பழமை பத்தாம் நூற்றாண்டு வரை செல்கிறது . இக்கோவிலில் மரபுவழியாக பூஜை செய்துவரும் உச்ச சாதியினர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் சுசீந்திரத்தில் குடியேறியவர்கள் .

1621-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது பற்றி கூறுகிறது. ஆடி பூர விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோச்சடையன் மாறன் காலத்தில் நிபந்தம் கொடுத்த இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என்னும் மூன்று நியாயங்கள் உழைக்காமல் கொடுக்கவேண்டும் என்ற குறிப்பு கல்வெட்டில் உள்ளது. மூன்று நியாயமும் முன்னூற்று நாயம் எனப்படும். இதனால் ஆரம்பக் கால சோழர் காலத்து வணிகர்களுடன் வந்த தெய்வமாக இது கருதப்படுகிறது. வடப்புறம் முன்மண்டபத்தில் வன்னியன் ,வன்னிச்சி , தளவாய் மாடன் , ஈசானம் ஆகிய பரிவார தெய்வங்கள் தெற்கு நோக்கி இருக்கின்றன. வடபுறம் மண்டபத்தில், சாஸ்தாவும் பைரவரும் இருக்கிறார்கள். முன் மண்டபம் மேற்கில் நிர்வான வடிவில் மோகினி பஞ்ச கன்னியர் உள்ளனர். இந்த மண்டப வாசலில் அண்மையில் செய்யப்பட்ட துவார பாலகிகள் உள்ளனர். முகமண்டபத்தின் தென்மேற்கு மாரியம்மன், அறம் வளர்த்த அம்மன் சிற்பங்கள் இருக்கின்றன . இக்கோவிலில் அர்ச்சனா விக்ரம் உள்ளது. கருவறையில் முன்பு அர்த்தமண்டபம் இருந்தாலும், முக மண்டபத்தில் இருந்து தரிசிக்கலாம். கருவறை அம்மனின் வடிவம் கடு சர்க்கரையால் ஆனது.

வடக்கு பார்த்து நின்ற கோலத்தில் எட்டு கைகளுடன் மகிஷாசுரனை அழித்த வடிவமாக காட்சித் தருகிறாள். அதனால் அம்மன் மகிஷாசுரமர்த்தினி எனவும் அழைக்கப்படுகிறாள். 4 கைகளில் பாசம், உடுக்கு சூலம், கபாலம் இருக்கின்றன. சுசீந்தரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னுதித்த நங்கை அம்மனை தரிசித்து விட்டுதான் தாணுமாலயனை தரிசிக்க செல்கின்றனர். இக்கோவில் சுசீந்திரம் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ளது. காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்படுகின்றன. அது போல மாலையும் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top