நேற்றிரவு, லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட போர்களை விடவும் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திலிருந்து பெய்ரூட் நகரம் மீண்டுவர பத்து வருடங்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஐந்து பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
லெபனானில் நீண்ட காலமாக அமைதியற்ற சூழலே நிலவுகிறது. அதற்குக் காரணம், அதன் அண்டை நாடுகளான சிரியா மற்றும் இஸ்ரேல் தான். 1985 லிருந்து 2000 - ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் ஏற்பட்ட போர், 2006 ல் ஏற்பட்ட ஜூலை போர், 2007 - 2008 ல் ஏற்பட்ட கலவரம் என்று தொடர்ச்சியாக அந்த நாடு பல்வேறு போரியல் துயரங்களைச் சந்தித்துவருகிறது. இதனால் லெபனான் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் லெபனானில் போர் எதுவும் நடைபெறாமல் அமைதி நிலவி வந்தது.
ஆனால், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடந்த வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்தால் ஏற்பட்டுவிட்டது. ஒரேயொரு வெடி விபத்து மூலம் பெய்ரூட் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இவற்றைக் கட்டியெழுப்ப பத்திலிருந்து இருபது ஆண்டுகள் கூட ஆகும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிவிபத்தில், இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று அரசுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இதுவரை 1500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடி மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 500 - க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.
இதில் சோகம் என்னவென்றால் வெடிவிபத்து ஏற்பட்ட 30 நிமிட காலகட்டத்தில் சுமார் 3,00,000 மக்கள் தம் வீடுகளை இழந்துள்ளனர் (2014 - ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பெய்ரூட் நகரத்தின் மக்கள் தொகை 3.60 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது). வெடிவிபத்தினால் பெய்ரூட் நகரில் மட்டும் 90 சதவிகித மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் இடிந்துவிட்டன. 75 சதவிகித வீடுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமாகிவிட்டன. பெய்ரூட் நகரில் மட்டும் ஐந்து பில்லி்யன் டாலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ரூட் நகரில் எந்தப்பக்கம் திரும்பினாலும் உடைந்த கான்கிரீட் துண்டுகளும், நொறுங்கிய கண்ணாடித் துகள்களுமே காட்சியளிக்கிறது. இன்னும் முழு வீச்சில் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்பது கவலை தரக்கூடிய செய்தி. இப்போதுதான் ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தம் மீட்புக் குழுவை அனுப்பத் தொடங்கியுள்ளன. மீட்பு பணி முடியும் தருவாயில் இறந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் என்று நம்பப்படுகிறது.
தீவிரவாதத்தினாலோ, உள்நாட்டுப் போரோலோ ஏற்படுத்த முடியாத பாதிப்பை ஒரேயொரு வெடிவிபத்து ஏற்படுத்திவிட்டது. சிறிது சிறிதாகக் கட்டி எழுப்பப்பட்ட பெய்ரூட் நகரமே இப்போது இடிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது..! உலக நாடுகள் அனைத்தும் விரைந்து உதவி செய்ய வேண்டும் என்பதே லெபனான் மக்களின் கோரிக்கையாக உள்ளது!
0 Comments