பிரேசிலில் தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு நின்றிருந்த காருக்குள் 7 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரேசில் நாட்டில் பல இடங்களில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் அவ்வப்போது தொழிற்போட்டி காரணமாக போதைப்பொருள் கும்பல்கள் பயங்கரமாக மோதிக்கொள்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள அங்ரா டோஸ் ரெயிஸ் நகரில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் 7 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்களை கொலை செய்தது யார், எப்படி கொலை செய்யப்பட்டனர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை இதே பகுதியில் 2 போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்ததாகவும், கொலை செய்யப்பட்ட 7 பேரும் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் கூறினர்.
0 Comments