பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா தொடர்ச்சியாக, குழந்தை கடத்தல், அவர்களை வைத்து ஆசிரமத்துக்குப் பணம் திரட்டுதல் என அடுக்கடுக்கான புகார்களுக்கு ஆளாகி வருகிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா தனது குழந்தைகளை நித்தியிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, நித்திக்கு எதிரான பல ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக கனடாவைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற பெண் சிஷ்யையும், நித்யானந்தா மீது பாலியல் குற்றம்சாட்டியிருந்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரமத்துக்குக் கொடுத்ததாகவும் பெங்களூரு ராம்நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுபோன்று நித்திக்கு எதிராக வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் சீடர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த முன்னாள் சீடர் ஒருவர் , 400,000 அமெரிக்க டாலர் மோசடி செய்ததாக நித்யானந்தா மீது அந்நாட்டு அரசிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பிரெஞ்சு அரசு நித்தி மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுபோன்று நித்தி மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், முதன் முதலாக நித்தியின் உண்மை முகத்தை வெளியுலகுக்குக் கொண்டு வந்த, லெனின் கருப்பன் ஊடகம் ஒன்றிடம் கூறுகையில், 2010ஆம் ஆண்டில் நித்தியின் தீய செயல்களை முதன் முதலில் வெளிப்படுத்தினோம். அதற்காக நித்யானந்தாவால் நாங்கள் வேட்டையாடப்பட்டோம். அப்போது, யாரும் எங்களுக்கு உதவவில்லை. நித்தியின் உண்மை முகத்தை வெளிக் கொண்டு வந்த பிறகு, ஆசிரமத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து பலரும் புகார் அளித்து வருகின்றனர். தற்போது நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் கூறுகையில், நித்யானந்தா மீதான பாலியல் வழக்குக்காக எனது சொத்துக்களை அனைத்தும் செலவிட்டேன். பணம் இல்லாத நிலையில் கடன் வாங்கி செலவிட்டேன். அவரால் என் வாழ்க்கையே நொறுங்கிவிட்டது. இருப்பினும் நீண்ட காலமாக இழந்த நம்பிக்கை தற்போது மீண்டும் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா சத்சங்கம் அல்லது ஆன்மீக வகுப்பில் கலந்து கொள்ள வரும் அனைவரிடமும், பணம் அல்லது சொத்துக்களை நன்கொடையாக வசூலித்து அதன் மூலம் சொத்துக்களைச் சேர்த்து வந்துள்ளார். இவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments