தனது தனி நாட்டிற்கு பெயரை மாற்றினார் நித்யானந்தா!

தனது தனி நாட்டிற்கு பெயரை மாற்றினார் நித்யானந்தா!

in News / International

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா மீது ஆரம்ப காலம் முதலே குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்துகொண்டு தான் இருக்கின்றன ஆனால்,. அவரோ, எங்கோ இருந்தபடி தினமும் தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழ்ங்கி வருகிறார்.

நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என போலீஸாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் கைலாசா இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆனால் இதற்கு ஈக்வேடார் நாடு மறுப்பு தெரிவித்திருந்தாலும் கைலாசா நாடு குறித்து தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிது.

கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாஷா என மாற்றியுள்ள நித்யானந்தா, தனது நாட்டிற்கு இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக பரபரப்பைக் கிளப்பியுள்ளார். ஈக்வடார் அரசு நி்த்யானந்தாவை ஏற்க மறுத்த நிலையில், வேறு சில நாடுகளில் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

தனிநாடு கோஷத்தை நித்யானந்தா கைவிடவில்லை. கைலாசா நாடு அமைக்கவும், சீடர்களுடன் வாழவும் தங்களை சில நாடுகளின் அரசுகள் வரவேற்றுள்ளதாக நித்யானந்தா கூறி உள்ளார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை காலை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நி்த்யானந்தா, கைலாசாவின் பெயரை ஸ்ரீகைலாஷா என மாற்றுவதாக தெரிவித்தார். மேலும் தான் கைலாசா தனி நாடு அறிவித்த பின்னர் அதை வரவேற்று லட்சக்கணக்கில் மி்ன்னஞ்சல்கள் குவிவதாகவும், இதுவரை 12 லட்சம் பேர் ஈ சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் பேர் தினசரி கைலாசா இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆகின்றனர். இப்போது வரை 12 லட்சம் பேர் ஈ - சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி கார்த்திகைத் தீபத் திருநாளில் அறிவிக்க உள்ளேன்.

கைலாசா தனி நாடு அறிவிப்புக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை என்று பெருமிதமாகக் கூறி உள்ளார் நித்யானந்தா.

மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பதிலளிக்க கொஞ்சம் நேரம் கொடுங்கள். இவ்வளவு பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பலர் நிலம் தருவதாக முன்வந்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள அவர்களுக்கு நன்றி. சில நாடுகளின் அரசுகள், எங்களை அதிகாரபூர்வமாக அணுகி கைலாசா நாடு அமைக்க அழைத்துள்ளனர். அவர்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை அவர்களுக்கு எனது நன்றி. விரைவில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவோம். மிக விரைவில் கைலாசாவிற்கு இடமும் அமையும். அப்படி அமைந்தால் அது பற்றி அறிவிப்பேன்.

கைலாசா தனி நாடு வலைதளப் பக்கத்தை ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பார்ப்பதால், சர்வர் முடங்கிப்போய் வேறு சர்வர் மாற்ற வேண்டிய வந்ததாகவும் அவர் சந்தோஷமாக கூறி உள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் நித்யானந்தா தேடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தனது கைலாசா நாடு பற்றி தினம் தினம் புதுப்புது தகவல்களை வெளியிட்டு மேலும் மேலும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார் நித்யானந்தா. நாளை கார்த்திகை தீபத்தன்று புதிய அறிவிப்புகளை வெளியிடப் போவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, அவர் எங்கிருக்கிறார் என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top