இந்தியா-சவுதி அரேபியாவின் உறவை மேம்படுத்த சவுதி பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி, அங்கு வேலை செய்து வரும் தொழில்நுட்ப கல்வி பயிலாத இந்தியர்களின் நிலை குறித்து சவுதி இளவரசர் முஹமது பின் சல்மானுடன் கலந்துரையாட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டுகளை விட இந்தியா-சவுதி அரேபியாவின் வர்த்தக ரீதியான உறவு மேம்பட்டிருப்பதை தொடர்ந்து, இருநாடுகளின் உறவை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, வரும் அக்டோபர் 29 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி சவுதி பயணம் மேற்கொள்ளவுள்ளார் .
அங்கு சவுதி இளவரசர் முஹமது பின் சல்மானை சந்திக்க உள்ள பிரதமர், இந்தியாவிலிருந்து சவுதி சென்று வேலை பார்க்கும் தொழில்நுட்ப கல்வி பயிலாத இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் பலரும் சாதாரண வேலைகளில் ஈடுபட்டு வருவதால், இதுவரை அவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர். ஒப்பந்தங்கள் அடிப்படையில் அங்கு வேலை செய்து வரும் இந்தியர்கள் பலரது கடவுச்சீட்டுகளும், அவர்களது நிறுவனத்தாரர்களின் பொறுப்பில் வைக்கப்படுவதால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவதிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பல ஆண்டுகளாக இந்த துன்பங்களை தொடர்ந்து அனுபவித்து வரும் நிலையில், எந்த மத்திய அரசும் இது குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. இந்நிலையில், வர்த்தக உறவை மேம்படுத்த சவுதி பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விவாதிக்கவிருக்கும் முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
0 Comments