ஃபுளோரிடா மாநிலம் பாம் பீச்சில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், எத்தனையோ அப்பாவிகளின் சாவுக்கு காரணமானவர் சுலைமானி என்று குறிப்பிட்டார். லண்டன், டெல்லி வரை தீவிரவாத சதித் திட்டங்களில் சுலைமானிக்கு பங்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது தீவிரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.
டெல்லியில் எத்தகைய தீவிரவாத தாக்குதலுக்கு சுலைமானி சதித் திட்டம் தீட்டினார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 2012ஆம் ஆண்டில் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை டிரம்ப் சுட்டிக்காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், Tal Yehoshua Koren என்ற பெண்மணியும், அவரது ஓட்டுநரும் சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். காந்தத்தின் மூலம் காரில் ஒட்டவைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம்சாட்டியிருந்தார்.
ஈரானை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷனை, காந்தத்தின் மூலம் ஒட்டவைக்கப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் டெல்லி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இந்த தாக்குதலில் ஈரானுக்கு நேரடித் தொடர்பிருப்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்படவில்லை என்பதோடு, அப்போது சுலைமானியின் பெயரும் அடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments