அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக ஜனநாயக கட்சி இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான ஜோ பைடன் , அதிபர் டிரம்புக்கு முக்கிய போட்டியாக இருப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பைடனின் மகனுக்கு உக்ரேன் நாட்டிலுள்ள எரிவாயு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அதிபரிடம் டிரம்ப் கேட்டு கொண்டார்.
இதனால் டிரம்ப், அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது.
இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்து, அதன் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் அது தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 உறுப்பினர்களும், டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால் அங்கு கண்டன தீர்மானம் எளிதில் நிறைவேறும் சூழல் இருந்தது.
இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
எனினும் இந்த பதவி நீக்க கோரும் விவகாரம் பற்றி டிரம்ப் கூறும்பொழுது, அரசை கவிழ்க்கும் முயற்சி, அமெரிக்கா மீது நடைபெறும் தாக்குதல் என கூறினார்.
இந்த கண்டன தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, டிரம்பின் பதவி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
0 Comments