அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.
அப்போதில் இருந்து, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு பக்கபலமாக இருந்து உதவி வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தனது பிரசாரத்தில் “அமெரிக்காவின் முடிவற்ற போர்களை நிறுத்துவோம்” என டிரம்ப் முழங்கினார். அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்தும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் அமெரிக்க படைகளை வாபஸ் பெற டிரம்ப் விரும்பினார்.
அதன்படியே அவர் பதவிக்கு வந்ததும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அதற்கு அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் மற்றும் டிரம்பின் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.
அதனை தொடர்ந்து, தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் முடிவு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலீபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் வலுத்தது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், திடீர் பயணமாக நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். டிரம்பின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் அவரது இந்த பயணம் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் தலைநகர் காபூலுக்கு வெளியே உள்ள பாக்ரம் விமானப்படை தளத்தில் டிரம்பின் விமானம் வந்து இறங்கியது.
அங்குள்ள ராணுவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு மத்தியில் டிரம்ப் உரையாற்றினர். அதனை தொடர்ந்து அவர் ராணுவ வீரர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டார்.
ராணுவ வீரர்களுக்கு வான்கோழி உணவை பரிமாறிய டிரம்ப், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். அதன் பின்னர் அவர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் அவர் ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட்டார்.
அதன்பிறகு டிரம்ப், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது தலீபான் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தலீபான்களுடன் அமெரிக்க மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் தலீபான்களுடன் பேசுகிறோம். போர் நிறுத்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். முதலில் போர் நிறுத்தத்தை விரும்பாத தலீபான்கள் இப்போது போரை நிறுத்த விரும்புகின்றனர். நான் அப்படித்தான் நம்புகிறேன். என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அனைவரும் பார்ப்போம்” என்றார்.
0 Comments