குமரி மாவட்டத்தில் குழந்தை உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

குமரி மாவட்டத்தில் குழந்தை உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

in News / Local

குமரி மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே கிடக்கும் காலி பாட்டில்கள், சிரட்டைகள் மற்றும் டயர்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளும்படியும், வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் கவனமாக இருக்கும்படியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

இதே போல நாகர்கோவில் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர்களிடம் ரத்த பரிசோதனை நடத்தியதில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஓன்று 2 வயது பெண் குழந்தை, மற்றொன்று 65 வயது மூதாட்டி.

இதைத் தொடர்ந்து 2 பேரையும் டெங்கு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் வரை காய்ச்சல் குணமாகாதவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து வருகிறோம். அவ்வாறு பரிசோதனை செய்ததில் ஒரு குழந்தை உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து 2 பேரையும் டெங்கு காய்ச்சல் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது 2 பேரும் நலமாக உள்ளனர். மேலும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ரத்த பரிசோதனை மாதிரி வந்த பிறகு அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பது தெரியவரும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆண்கள் வார்டில் 20 படுக்கைகளும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டில் தலா 20 படுக்கைகளும் என மொத்தம் 60 படுக்கை வசதி உள்ளன. அந்த படுக்கைகளில் கொசு வலை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கவனக்குறைவாக இருந்து விடாமல் அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top