நாகர்கோவில் மற்றும் களியக்காவிளையில் போதை மருந்துகளுடன் 3 பேர் கைது!

நாகர்கோவில் மற்றும் களியக்காவிளையில் போதை மருந்துகளுடன் 3 பேர் கைது!

in News / Local

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் ஒரு சில இடங்களில் கஞ்சா, போதை மருந்துகள் விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் நேற்று முன்தினம் பார்வதிபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றித்திரிந்தனர்.

உடனே 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதனையடுத்து, அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் சோதனை நடத்தினர். சோதனையில் 2 பேரிடமும் போதை மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், அறுகுவிளையை சேர்ந்த சேகர் (வயது 42) மற்றும் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த ஆரோன்ராஜா வினுவின் (38) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் போதை மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இளைஞர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோருக்கு போதை மருந்துகளை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

2 பேர் மீதும் ஏற்கனவே போதை மருந்து விற்பனை வழக்குகள் வடசேரி போலீஸ் நிலையத்தில் உள்ளன. இந்த நிலையில் மீண்டும் 2 பேரும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு போதை மருந்துகள் எங்கிருந்து கிடைத்தன? என்ற விவரம் சரியாக தெரியவில்லை.

வெளியூர்களில் இருந்து அவற்றை வாங்கி வந்தார்களா? அல்லது வெளி நாடுகளில் இருந்து கிடைத்ததா? பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இவர்களிடம் இருந்து போதை மருந்துகளை வாங்கியவர்கள் குறித்தும் விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். எனவே இதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே மதுரையில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு செல்லும் பயணிகள் ரெயிலில் போதை மாத்திரைகள் கடத்தி செல்லப்படுவதாக பாறசாலை ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்துக்குரிய ஒரு நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரின் உடலில் ரகசிய பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை செய்தனர். அப்போது உடனிருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனே போலீசார், போதை மாத்திரையுடன் பிடிபட்ட நபரை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அஜ்மல் (வயது 21) என தெரியவந்தது.

மேலும் தப்பி ஓடிய 2 பேர், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மாகின் மற்றும் தங்கு என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அஜ்மலை கைது செய்தனர். அஜ்மலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் போதை மருந்துகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கைதானவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கைதான 3 பேருமே பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை, மருந்துகள் விற்பனை செய்ததாக தெரிகிறது. கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top