நகை பட்டறையில் 37½ பவுன் கொள்ளை

நகை பட்டறையில் 37½ பவுன் கொள்ளை

in News / Local

மார்த்தாண்டத்தில் நகை பட்டறையில் 37½ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக, மாயமான ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மனோஜ் (வயது 40) என்பவர் மார்த்தாண்டம் ஆர்.சி.தெரு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு தங்க நகைகளை செய்து, அவற்றை கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.

பட்டறையில் 5 பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் 2 பேர் கேரளாவையும், 2 பேர் மார்த்தாண்டத்தையும், ஒருவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆவார்கள். மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பெயர் சுஜய் (25). இவர் வேலைக்கு சேர்ந்து 4 மாதங்களே ஆகிறது. கேரளாவை சேர்ந்த 2 பேர் மற்றும் சுஜய் ஆகியோர் மார்த்தாண்டம் வடக்குத்தெரு பகுதியில் வாடகை கட்டிடத்தில் வசித்து வந்தனர். நகைக் கடை உரிமையாளர் மனோஜ் அடிக்கடி ஊருக்கு சென்று விடுவார். அதே போல் அவர் ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

அவர் ஊருக்கு செல்லும் நேரத்தில் கடையை கேரளாவை சேர்ந்த ஒருவர் தான் பார்த்து கொள்வது வழக்கம். அவர் பட்டறையை அடைக்கும் போது, அங்கே செய்து வைத்திருக்கும் நகைகள் மற்றும் பணத்தை, தான் தங்கியிருக்கும் அறைக்கு கொண்டு வந்து, பாதுகாப்பாக வைப்பது வழக்கம்.

அதே போல் நேற்று முன்தினம் பட்டறையில் இருந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை ஒரு பெட்டியில் வைத்து தனது அறைக்கு கொண்டு வந்து வைத்திருந்தார். மாலையில் பார்த்த போது பணத்தை காணவில்லை. உடனே அவர் நகை பெட்டியை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 37½ பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கேரள ஊழியர்கள், சுஜயை தேடிய போது அவரையும் காணவில்லை.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சுஜய் தான் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்க வேண்டும் என்று கருதினார்கள். பட்டறை உரிமையாளர் மனோஜூக்கு அறிமுகமான ஒருவரின் சிபாரிசின் பேரில் சுஜய் வேலைக்கு சேர்ந்தார். சுஜய் எந்த ஊர் என்பது பற்றி கூட விசாரிக்காமல், நம்பிக்கையின் பேரில் அவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். 

இது பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். உடனே இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் சுஜயை தேடி வருகிறார்கள். 

இந்த கொள்ளையில் சுஜய்க்கு தொடர்பு இருந்தால், அவருக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த வேறு யாரும் உதவி செய்து இருப்பார்களோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.7½லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top