மார்த்தாண்டம் அருகே  ரூ.2 லட்சத்துக்காக டிரைவரை தீர்த்துக்கட்ட முயன்ற 4 பேர் கைது!

மார்த்தாண்டம் அருகே ரூ.2 லட்சத்துக்காக டிரைவரை தீர்த்துக்கட்ட முயன்ற 4 பேர் கைது!

in News / Local

மார்த்தாண்டம் அருகே சிதறால் அரவிளையை சேர்ந்த வேன் டிரைவர் சாந்தகுமார் (வயது 40). இவர் பிளம்பிங் வேலையும் செய்து வந்தார். இவருக்கு ராதா (32) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாந்தகுமார் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் ஒரு வீட்டில் பிளம்பிங் வேலை செய்துவிட்டு, மாலையில் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

அப்போது, சாந்தகுமாரின் நண்பர் பாகோடு மருதன்விளையை சேர்ந்த சுனில்குமார் (30) அங்கு வந்தார். அவருடன் மேலும் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சாந்தகுமாரிடம் ‘உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். என்னுடன் வா’ என சுனில் குமார் அழைத்தார். நண்பர்தானே அழைக்கிறார் என நினைத்து சாந்தகுமார் அவருடன் . மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சாந்தகுமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் சுனில்குமார் அமர்ந்து இருந்தார். மற்ற 3 வாலிபர்களும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.

மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதிக்கு சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லிவிட்டு சாந்தகுமாரை, சுனில்குமார் உள்பட 4 பேரும் வயல்வெளி பகுதிக்குள் இழுத்து சென்றனர். உடனே சாந்தகுமார், எதற்காக என்னை இப்படி இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு, சுனில்குமார், சிறையில் இருக்கும் சாஜின் உன்னை கொலை செய்யுமாறு என்னிடம் கூறியுள்ளார். அதற்காக ரூ.2 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார். எனவே, இப்போது உன்னை கொலை செய்ய போகிறோம். ஆனால், நீ ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறோம்’ என்று கூறியுள்ளார்.அத்துடன், சாந்தகுமாரின் மனைவி ராதாவுக்கு போன் செய்து, உன்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளோம். ரூ.50 ஆயிரம் தரா விட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதா என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்தார்.

ஆனாலும் நிலைமையை புரிந்து கொண்ட ராதா, மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் சென்று தகவலை தெரிவித்தார். உடனே இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க திட்டம் வகுத்தனர்.

அந்த கும்பல் கேட்டுக்கொண்டபடி ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் கூறும் இடத்திற்கு செல்லுமாறு ராதாவிடம் அறிவுறுத்தினர். அதன்படி ராதா பணத்துடன் ஆட்டோவில் ஞாறாம்விளை பகுதிக்கு சென்றார். அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறைந்திருந்தனர்.

ஞாறாம்விளை பகுதியில் சென்றதும், அந்த கும்பல் சாந்தகுமாரை அழைத்து கொண்டு வந்து பணத்தை பெற முயன்றது. அப்போது, அந்த பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர்.

பிடிபட்ட சுனில்குமார் உள்பட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சுனில்குமாருடன் இருந்தவர்கள் கேரள மாநிலம் பாறசாலை புத்தன்கடை வெட்டுவிளையை சேர்ந்த ஆனந்த் (27), கருமானூரை சேர்ந்த சஜிகுமார் (24), அயிரசூரங்குழியை சேர்ந்த சஜின் (30) என்பது தெரிய வந்தது.

சுனில்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிதறால் பகுதியை சேர்ந்த பேராசிரியை சர்மின் என்பவரை ஒருதலை காதல் விவகாரத்தில் சாஜின் கொலை செய்தார். கொலை செய்யப்பட்ட சர்மின், சாந்தகுமாரின் உறவினர் ஆவார். இந்த வழக்கில் சாந்தகுமார் கோர்ட்டில் சாட்சி கூறியதை அடுத்து சாஜினுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. அவர் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

இதற்கிடையே சுனில்குமார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சாஜினுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தனக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்த சாந்தகுமாரை கொலை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக சாஜின் கூறியுள்ளார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த சுனில்குமார், சாந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் கடத்தி சென்றுள்ளார்.

ரூ.2 லட்சத்துக்காக சாந்தகுமாரை கொலை செய்வது என்று முடிவு செய்து இருந்த போதிலும், அவருடைய மனைவியிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறித்து விட வேண்டும் என்று சுனில்குமார் தரப்பினர் நினைத்துள்ளனர். அதற்காகத்தான் ராதாவிடம் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளனர். அப்போதுதான் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில்குமார், ஆனந்த், சஜிகுமார், சஜின் ஆகியோரை கைது செய்தனர். சினிமா பாணியில் நடந்து முடிந்த இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top