குமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

குமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

in News / Local

குமரி மாவட்டத்தில் இருந்து ரே‌ஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்காக மாவட்ட எல்லையில் 37 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை தொடர்ந்து பறிமுதல் செய்து கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் கொல்லங்கோடு அருகே கடற்கரைச்சாலை வழியாக கேரளாவுக்கு கடத்தல் பொருட்களுடன் ஒரு வாகனம் செல்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே நீரோடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசேகருக்கு தகவல் கொடுத்து விட்டு, கொல்லங்கோடு சப்–இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, டிரைவர், மீன் ஏற்றிச் செல்வதாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவின் கதவை திறக்க கூறினர். உடனே, டிரைவர் டெம்போவில் இருந்து குதித்து தப்பியோடினார். அதைத்தொடர்ந்து டெம்போவின் பூட்டை போலீசார் உடைத்து சோதனை செய்த போது, அதில் 5 டன் ரே‌ஷன் அரிசி இருப்பதும், அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. 5 டன் ரே‌ஷன் அரிசி மற்றும் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்து மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top